ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு.. அமைதிக்கு வலியுறுத்தல்!
ரஷ்ய அதிபர் புதினுடன் உக்ரைன் போர், இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசியில் உரையாடினார். இருவரும் தொலைபேசி உரையாடல் தொடர்பாக மத்திய அரசு வெளியிடப்பட்ட அறிக்கையில், உக்ரைன் உடனான போரின் தற்போதைய நிலவரம் குறித்து மோடியிடம் புதின் விளக்கமளித்தார். உக்ரைன் குறித்து விரிவான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்காக புதினுக்கு மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். ரஷ்யா-உக்ரைன் இடையேயான சிக்கலுக்கு அமைதியான முறையில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதையும் மோடி சுட்டிக்காட்டினார்.
பரஸ்பரம் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்தும் இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். இந்தியா-ரஷ்யா இடையேயான சிறப்பு வாய்ந்த, முன்னுரிமையுடன் கூடிய உத்திப்பூர்மான கூட்டாண்மையை மேலும் ஆழமாக முன்னெடுத்துச் செல்வது என்றும் இரு தலைவர்களும் விவாதித்தனர். மேலும், இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள 23ஆவது ஆண்டு இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருமாறு புதினுக்கு மோடி அழைப்பு விடுத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் பெட்ரோலிய பொருட்களை இந்தியா கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் இரு தலைவர்களின் தொலைபேசி வழி பேச்சு முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.