பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை

தமிழகத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை அடுத்து பிரதமர் மோடி இந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று ஆந்திரா மற்றும் தமிழகத்துக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதில் முக்கிய நிகழ்வாக, சென்னை டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து, சென்னை விமான நிலையம் மற்றும் திருச்சி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்கும், எண்ணூரில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துறைமுக முனையத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 

பிற்பகலில் பெருமாநல்லூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தேர்வு செய்யப்பட்டு, 40 அடி நீளத்திலும், 60 அடி சுற்றளவிலுமான பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் வந்து இறங்குவதற்காக மைதானம் அருகே, 3 இடங்களில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொதுக்கூட்ட மேடைக்கு அருகிலேயே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான மேடை அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றப்பின், மோடி பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். 

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சுமார் 2,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

இதனிடையே மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ பேக் மோடி என்ற வாசகம் இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதேபோல், தமிழகம் மோடியை வரவேற்கிறது என்கிற வாசகமும் இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com