விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம் இன்று தொடக்கம் !
விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை ஜார்க்கண்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்று ‘பிரதமர் கிஷான் மந்தன் யோஜனா’ திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம், தற்போது 18 முதல் 40 வயது வரை உடைய விவசாயிகள், 60 வயதை எட்டிய பிறகு அவர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். இந்தத் திட்டத்தை பிரதமர் மோடி இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடங்கி வைக்கிறார்.
இதனையொட்டி தலைநகர் ராஞ்சியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி மர்மு, முதலமைச்சர் ரகுபர் தாஸ், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா மற்றும் பலர் பங்கேற்க உள்ளனர். இதேபோல் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மாநில தலைமைச் செயலக கட்டட கட்டுமானப்பணிக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.