125 கோடி மக்களுக்காக ஆட்சியில் இருக்கிறோம்: குஜராத்தில் பிரதமர் மோடி பேச்சு
குஜராத்தில் பிரச்சாரத்தின் போது பேசிய பிரதமர் மோடி தாங்கள் அதிகாரத்திற்காக ஆட்சியில் இல்லை என்றும், 125 கோடி மக்களுக்காகவே இருப்பதாகவும் தெரிவித்தார்.
குஜராத்தில் வரும் டிச.9 மற்றும் 14ஆம் தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். குஜராத்தில் ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் காங்கிரஸும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் பாஜகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.
பின்னர் பிரச்சார மேடையில் பேசிய அவர், மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது காங்கிரஸுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றார். அவர்கள் தொடர்ந்து தனக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறினார். இருப்பினும் தான் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த மண்ணில் பிறந்தவன் என்பதால், பின்வாங்காமல் ஏழைகள் வருமானத்தை உயர்த்துவதற்கு பாடுபடுவேன் என்று தெரிவித்தார். அத்துடன் இந்த நாட்டை யாரும் சூறையாடுவதை தான் அனுமதிக்க முடியாது என்றும் மோடி ஆவேசமாக பேசினார்.
குஜராத்தில் பூகம்பம் வந்து அனைத்து கட்டடங்களும் இடிந்த பிறகு, பார்ப்பவர்கள் அனைவரும் இது பூகம்பத்திற்கு பிறகு கட்டடப்பட்ட பள்ளி, மண்டபம், பல்கலைக்கழகம், மருத்துவமனை என்று கூறிகிறார்கள். அத்தகைய செயலை செய்தது பாஜக அரசுதான் என்று பெருமிதம் தெரிவித்தார். அத்துடன் காங்கிரஸ் ஆட்சியை விட, பாஜக ஆட்சி அனைத்து விதத்திலும் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறினார்.