இயற்கை வாழ்வியலுக்கு திரும்புகின்றனர் உலக மக்கள்: பிரதமர் மோடி பேச்சு
உலகம் முழுவதும் மக்கள் இப்போது இயற்கையான வாழ்வியலை நோக்கி திரும்பிக் கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் அகில இந்திய ஆயுர்வேத மருத்துவ நிறுவனத்தை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர், இப்போது மாறி வரும் மருத்துவ சூழலில் ஆயுர்வேதம் முன்னிலை பெற அதிக வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்தார். மக்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வை நோக்கி கவரப்படுவதாக கூறிய அவர், அதற்கு ஆயுர்வேதம் சிறந்த வழியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் மாவட்டந்தோறும் ஆயுர்வேத மருத்துவமனை இருக்க வேண்டும் என்றும் அதற்காக அரசு பணியாற்றி வருவதாகவும் மோடி குறிப்பிட்டார். ஆயுர்வேத மருத்துவத்தில் உடல்நல பாதிப்புகளுக்கு நீண்ட கால நிவாரணம் கிடைப்பதுடன் பக்கவிளைவுகள் இல்லாதது கூடுதல் நன்மை என்று கூறினார். இந்த அரிய மருத்துவ முறையை பிரபலப்படுத்த பெரிய நிறுவனங்களுக்கு சமூகக் கடமை இருப்பதாகவும் தெரிவித்தார். நாட்டின் தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டது போலவே, விரைவில் ஆயுர்வேதத்தின் மூலம் ஆரோக்கிய புரட்சி ஏற்படும் என்றும் மோடி கூறினார். உலகம் முழுவதும் மக்கள் இப்போது இயற்கையான வாழ்வியலை நோக்கி திரும்பிக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.