ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து... பிராந்திய பிரச்னை, காலநிலை மாற்றம் குறித்து பேச்சு!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் தொடர்பு கொண்டு வாழ்த்துகள் தெரிவித்ததாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அதிபராகவும், இந்திய வம்சாவளி தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் கடந்த மாதம் 20-ந் தேதி பதவியேற்றனர்.
ஜோ பைடன் பதவியேற்றதும் அவருக்கும், கமலா ஹாரிசுக்கும் பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த நிலையில் ஜோ பைடன் உடன் தொடர்பு கொண்டு வாழ்த்துகள் தெரிவித்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது:- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பேசினேன். அவரது வெற்றிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். பிராந்திய பிரச்னைகள் மற்றும் பகிரப்பட்ட முன்னுரிமைகள் குறித்து விவாதித்தோம். மேலும், காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க ஒப்புக்கொண்டோம்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் பாதுகாப்பை மேற்கொள்வதற்கு மூலோபாய கூட்டாட்சியை பலப்படுத்த எதிர்நோக்கியுள்ளோம்’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.