“கடந்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு நிரந்தர அரசுப்பணி” - பிரதமர் பெருமிதம்
ரோஸ்கர் மேளா (Rozgar Mela) என்பது அரசாங்கம் நடத்தும் ஒரு வேலைவாய்ப்பு முகாம். இதில் பயன்பெற்று வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு (சுமார் 71,000 இளைஞர்களுக்கு), நேற்று டிஜிட்டல் மூலம் பணி ஆணை பிரதமரால் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று நடந்த நிகழ்வில் டிஜிட்டல் வழியாக கலந்துக்கொண்ட பிரதமர் மோடி, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் லட்சக்கணக்கான அரசு வேலைகளை இளைஞர்களுக்கு வழங்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டினார். இதுகுறித்து நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “கடந்த 18 மாதங்களில் ஏறக்குறைய 10 லட்சம் பேருக்கு நிரந்தர அரசு வேலைகளை வழங்கியதன் மூலம் எங்கள் அரசாங்கம் புதிய சாதனையை படைத்துள்ளது” என்று கூறினார்.
மேலும், “நாட்டின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களில் அரசு வேலைகளை வழங்குவதற்கான பிரசாரம் நடந்து வருகின்றன. இன்றும் 71,000 இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில், கிட்டத்தட்ட 10 லட்சம் இளைஞர்களுக்கு எங்கள் அரசாங்கத்தால் நிரந்தர அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய பதிவு. முந்தைய எந்த அரசாங்கத்தின் ஆட்சியிலும், இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை இவ்வளவு அதிகமாக கிடைக்கவில்லை” என்றார்.
குவைத் பயணம் குறித்து பேசிய பிரதமர் மோடி, “நான் கடந்த ஞாயிறு இரவு குவைத்தில் இருந்து திரும்பினேன். அங்கு நான் இந்திய இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினேன். நாடு திரும்பியபின், எனது முதல் நிகழ்ச்சி இதுதான். இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையில் புதிய ஆரம்பம் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் பல வருட கனவு நனவாகியுள்ளது. பல வருட கடின உழைப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது” என்றார்.
பணி ஆணை பெற்றவர்கள் அடுத்தடுத்த நாட்களில் உள்துறை அமைச்சகம், தபால் துறை, உயர் கல்வித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை போன்ற துறைகளில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “பணியமர்த்தப்பட்ட 71,000 பேரில் 29 சதவீதம் பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். இதில் பழங்குடியினர் முறையே 15.8 மற்றும் 9.6 சதவீதமாக உள்ளனர்” என்று கூறினார்.