“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி
புல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை பறிகொடுத்த இந்தியர்களின் கொந்தளிப்பு தன் இதயத்திலும் தீயாக எரிந்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் பாட்னா மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். குழாய் மூலம் எரிவாயு விநியோக திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர், புல்வாமா தாக்குதலால் இந்திய மக்களின் நெஞ்சில் கொந்தளிக்கும் நெருப்பு தன்னுடைய இதயத்திலும் எரிந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். பீகாரில் தொடங்கப்பட்டுள்ள குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டத்தால், பீகார் மட்டுமின்றி அருகாமையில் உள்ள ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களும் சிறப்பான வளர்ச்சியை பெறும் என அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.

