“கொரோனாவை மக்கள் இன்னும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை” - பிரதமர் மோடி
கொரோனா நிலைமையை இன்னும் மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 3,36,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14,613 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 97, 636 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா முழுவதும் மாநில அரசுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன. ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
நேற்று பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. இருந்தாலும் பெரும்பாலானோர் வீடுகளில் தங்காமல் வீதிகளில் உலாவிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. தமிழகத்தை பொருத்தவரை தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட சிலர் வெளியே நடமாடி வருவதாகவும், அரசின் உத்தரவுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா நிலைமையை இன்னும் மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், அரசு கூறியுள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி உங்களையும் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த மாநில அரசுகளை கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.