அக்.2 முதல் நெகிழிக்கு எதிராக இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு
ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியப்படும் நெகிழி பொருட்களுக்கு எதிராக மிகப் பெரிய இயக்கத்தைத் தொடங்க பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
மாதாந்திர மனதின் குரல் வானொலி உரையில் இதை அவர் தெரிவித்தார். வருகிற அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளையொட்டி நெகிழி தவிர்ப்பு இயக்கத்தை தொடங்க பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் நெகிழி பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பேராபத்து ஏற்படுவதை அனைவரும் உணர வேண்டும் என்று கூறிய மோடி, நெகிழி பொருட்களின் சேகரிப்பு மற்றும் இருப்பு ஆகியவற்றை முறைப்படுத்துவதன் மூலம் சூழலியலைக் காக்க நடவடிக்கை தேவை என்றும் குறிப்பிட்டார். சுதந்திர தின உரையிலும், ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் நெகிழியைத் தவிர்க்க வேண்டும் என பிரதமர் கூறிய நிலையில், மனதின் குரல் வானொலி உரையிலும் அதை வலியுறுத்தியுள்ளார்.

