நவாஸ் ஷெரிப்பை சந்திக்கிறார் மோடி?

நவாஸ் ஷெரிப்பை சந்திக்கிறார் மோடி?
நவாஸ் ஷெரிப்பை சந்திக்கிறார் மோடி?

இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் வரும் ஜூனில் இந்தியப் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த குல்பூஷன் ஜாதவ் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்திய உளவாளி என பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். முன்னாள் கடற்படை அதிகாரியான இவருக்கு இந்தியாவின் ‘ரா’ உளவுப்பிரிவு அதிகாரி எனவும் பாகிஸ்தானில் உளவு பார்க்க வந்தவர் எனவும் குற்றம் சுமத்தி பாகிஸ்தான் அரசு மரண தண்டனை விதித்துள்ளது. ஜாதவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாடவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் தாக்குதலில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இருவரது தலைகளையும் பாகிஸ்தான் வீரர்கள் துண்டித்ததுடன், அவர்கள் உடல்களையும் சிதைத்துவிட்டுச் சென்றனர். இச்சம்பவம் குறித்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நேரில் அழைத்து, இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இப்படி இந்தியா- பாகிஸ்தான் இடையில் தொடர்ச்சியாக மோதல் போக்குத்தான் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு வருகிற ஜூன் மாதம் கஜகஸ்தானில் நடைபெற உள்ளது. ஏற்கனவே 2015-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் இந்திய பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் சந்தித்து பேசினர். இந்நிலையில் இந்தாண்டு நடைபெறும் மாநாட்டில் இரு தலைவர்களும் பேசிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளன. இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் பொருட்டும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நலன்களை மேம்படுத்தும் பொருட்டும் இருநாட்டு தலைவர்களும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினராக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு ஒப்புதல் தற்போதைய மாநாட்டில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com