முதலமைச்சர்களுடன் பிரதமர் காணொலிக் கூட்டம் : பொருளாதாரம் குறித்து ஆலோசனை
பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மே 17ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய பொருளாதாரம் மற்றும் மக்களின் வருமானத்திற்காக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் பொதுமுடக்கத்தில் தளர்வுகளை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றன.
இந்நிலையில் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணோளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன், வருவாய்துறை அமைச்சர் உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு மேலும் சில அறிவிப்புகள் வெளியிடப்படலாம் எனப்படுகிறது. பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் வருமானம் தடையின்றி கிடைக்கவும் வழிவகை செய்யப்படும் எனத் தெரிகிறது.