“என்னை விமர்சித்து ஓட்டு வாங்க போட்டி நிலவுகிறது” - மோடி தாக்குதல்
நாடு தற்போது புதிய நீதி மற்றும் புதிய பாணியுடன் பயணித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிகள் மற்றும் பிரச்சார கூட்டங்கள் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடியும் பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில் நொய்டாவில் இன்று பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றினார் பிரதமர் மோடி. இந்தக் கூட்டத்தில் மோடி புல்வாமா தாக்குதல் மற்றும் இந்தியா அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நடத்திய பால்கோட் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த உரையின் போது அவர் “முதன்முறையாக நமது நாடு பயங்கரவாதிகளுக்கு அவர்கள் மொழியில் பதில் அளித்துள்ளது. ஆனால் இதற்கு முன் இருந்த அரசுகள் பயங்கரவாத தாக்குதலுக்கு பின் உள்துறை அமைச்சரை மாற்றிவிட்டு அமைதியாக இருந்து விட்டன. மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அதற்குப் பதிலடி தர நமது படைகள் தயாராக இருந்தன. ஆனால் அவற்றின் கைகள் கட்டிப் போடப்பட்டிருந்ததாக தகவல்கள் உள்ளன” எனக் கூறியுள்ளார்.
மேலும் மோடி, “புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தும் என்று எதிர்பார்த்தது. அதனால் எல்லை பகுதிகளில் அதிக ராணுவ வீரர்களை பாகிஸ்தான் குவித்தது. இந்த முறை நாம் வான் வழியில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை அதிரவைத்துள்ளோம்.
சர்ஜிகல் ஸ்டிரைக் மற்றும் பால்கோட் தாக்குதல்கள் மூலம் தற்போது இருப்பது புதிய இந்தியா என்பதை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் புரிந்துகொள்ளவேண்டும். அத்துடன் தற்போது இருக்கும் இந்தியா புதிய நீதி மற்றும் பாணியுடன் பயணித்து வருவகிறது. என்னை கடுமையாக விமர்சித்து ஓட்டு வாங்க எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் போட்டி நடந்துவருகிறது” எனக் கூறியுள்ளார்.