ஜப்பான், சீனாவிற்கு பிரதமர் மோடி இன்று பயணம்..!
4 நாட்கள் அரசு முறைப் பயணமாக ஜப்பான், சீனா நாடுகளுக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி, இருநாட்டு தலைவர்களை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டம் செய்துள்ளார்..
பிரதமர் மோடி15வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று மாலை ஜப்பான் செல்கிறார். இன்றும், நாளையும் ஜப்பானில் பயணிக்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷிகேரு இஷிபாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இந்தியா, ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு தொடர்பாக இதில் ஆலோசிக்கப்படவுள்ளது.
2014இல் பிரதமராக பதவியேற்ற பிறகு 8ஆவது முறையாக பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார். ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, வரும் 31 மற்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதி சீனா செல்கிறார். சீனாவின் தியான்ஜின் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டின் ஒருபகுதியாக சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட பல உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பை மேற்கொள்ள உள்ளார். 2018இல் இந்தியா, சீனா படைகள் இடையே நடந்த மோதலுக்கு பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக சீனா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..