
அனல் தெறிக்கும் பேச்சு.. காங்கிரஸ் மீதான கடும் விமர்சனம்.. வல்லபாய் படேலை ஏன் இந்தியாவின் முதல் பிரதமராக்கவில்லை என்றெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசிய வேகம் அடங்கும் முன் 4 நாள் பயணத்தை தொடங்கியிருக்கிறார் பிரதமர் மோடி.
ஜோர்டான், பாலஸ்தீன்,ஓமன் மற்றும் யுனைட்டட் அரப் எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர். இன்றுதான் கிளம்பியிருக்கிறார் என்றாலும் ட்விட்டரில் நேற்றே தனது பயண விபரங்களை பட்டியலிட்டு விட்டார். அனைத்து நாடுகளுடனும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும், உறவை வலுப்படுத்துவது குறித்தும் பேச உள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஜோர்டானில் இருந்து பாலஸ்தீனுக்கு 10-ம் தேதி போய்ட்டு , அப்படியே ஓமன் , அரப் எமிரேட்ஸ் நாடுகளுக்கு போறேன்னு சொல்லியிருக்க பிரதமர், தொழிலதிபர்களோடு உரையாட உள்ளதாகவும், பொருளாதார இணைப்புகள் பலவற்றை கண்டறிந்து , வளர்ச்சிக்கு தேவையானவற்றை பெருக்குவதாகவும் சொல்லியிருக்கார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. அதில் குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் இரு அவைகளிலுமே பேசிய பின் கிளம்பியிருக்கிறார் பிரதமர் மோடி. வழக்கம் போல தன்னுடைய பயணங்களில் வித்தியாசம் காட்டும் பிரதமர் , இந்த முறையும் நிறைய வித்தியாசம் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.