6 கோடியை தாண்டிய பின்தொடர்வோர் - ட்விட்டரில் அசத்தும் பிரதமர் மோடி
ட்விட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 6 கோடியாக அதிகரித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் மிகவும் தீவிரமாக பயன்படுத்துபவர் பிரதமர் மோடி. கருத்துகள் தெரிவிப்பது, உரை நேரலை என ட்விட்டர் கணக்கை அடிக்கடி பயன்படுத்துவார். இந்நிலையில் ட்விட்டரில் பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 6 கோடியாக அதிகரித்துள்ளது. 2009ம் ஆண்டு ட்விட்டரில் இணைந்த பிரதமர் மோடி 2354 கணக்குகளை பின் தொடர்கிறார். கடந்த வருடம் செப்டம்பரில் 5 கோடியாக இருந்த பிரதமர் பின் தொடர்வோரின் எண்ணிக்கை தற்போது 6 கோடியாக உயர்ந்துள்ளது.
அதாவது கடந்த 10 மாதங்களில் ஒரு கோடிபேர் அதிகரித்துள்ளனர். 2015ம் ஆண்டு ட்விட்டரில் இணைந்த ராகுல்காந்தி கணக்கை 1.5 கோடி பேர் பின் தொடர்கின்றனர். அவர் 267 பேரை பின் தொடர்ந்து வருகிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை 8.3 கோடி பேர் ட்விட்டரில் பின் தொடர்கின்றனர். அவர் வெறும் 46 பேரை மட்டுமே பின் தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.