“திருவிழாக்களில் நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு தேவை”- பிரதமர் மோடி
பண்டிகை மற்றும் விழாக்களின்போது, நீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றிய அவர், சொந்த நீர் கொள்கையை வகுத்த முதல் மாநிலமாக மேகாலயா மாறியுள்ளதை சுட்டிக்காட்டினார். அதேபோல் ஹரியானாவில் மிகக் குறைந்த நீர் தேவைப்படும் பயிர்கள் ஊக்குவிக்கப்படுகின்றன, இதனால் விவசாயிகள் இழப்புகளிலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
புதுமையானவற்றை ஆராய்வதில் நமது விஞ்ஞானிகள் உலகிலேயே மிகச் சிறந்தவர்கள் என்பதை சந்திரயான்-2 நிரூபித்துள்ளதாக மோடி பெருமிதம் தெரிவித்தார். தண்ணீர்ப் பிரச்னை குறித்து பேசிய அவர், பண்டிகை காலம் தொடங்கிவிட்டது, பண்டிகை காலத்தில் பல விழாக்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. நீர் பாதுகாப்பிற்காக நாம் ஏன் இந்த விழாக்களை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என வினவியுள்ளார். திருவிழாக்களில் நீர் சேமிப்பு, நீர் மேலாண்மை குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.