‘நக்சலிசத்தின் முதுகெலும்பு பாஜக ஆட்சியில் அடித்து நொறுக்கப்பட்டது’ - பிரதமர் மோடி பேச்சு
பாஜக ஆட்சியில் நக்சலிசத்தின் முதுகெலும்பு அடித்து நொறுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு 2ம் கட்டமாக வருகிற 11 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “காங்கிரஸ் ஆட்சியின்போது காஷ்மீர் பிரச்னை, அயோத்தி விவகாரத்தில் உறுதியான, சுமுகமான தீர்வுகள் எட்டப்படவில்லை. பாஜக ஆட்சியில்தான் அது சாத்தியமானது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சியின் போது அமைச்சர் பதவிகளுக்காக பேரம் பேசப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல்கள் ஒழிக்கப்பட்டனர். நக்சலிசத்தின் முதுகெலும்பு அடித்து நொறுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.