ஆசியாவிலேயே 2வது மிகப் பெரிய ரயில் பாலத்தை திறந்தார் மோடி
ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய ரயில் பாலத்தை அசாமில் இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். வடகிழக்கு மாநிலங்களின் கனவு திட்டமான போகிபீல் பாலம் 21 ஆண்டு கால கட்டுமானப் பணிகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 1997-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் எச்.டி.தேவகவுடா, போகிபீல் பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய நிலையில் 21 ஆண்டுக்கு பிறகு அப்பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்தப் பாலம் பிரம்மபுத்திரா நதியின் மேலே சுமார் 4.98 கிலோ மீட்டர் தூரத்துக்குச் செல்கிறது. இதுவே நாட்டின் முதல் நீளமான பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. மேலும் ஆசியாவின் இரண்டாவது நீளமான பாலமும் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
இப்பாலத்தால் அஸ்ஸாமில் உள்ள டின்சுகுகியாவிற்கும், அருணாச்சலப் பிரதேசத்தின் நாகர்லகுன் நகரத்திற்கும் இடையேயான பயணம் 10 மணி நேரம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போகிபீல் பாலம் இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

