ஜம்மு காஷ்மீர்: அரசியல் தலைவர்களுடனான பிரதமர் சந்திப்பு: இவையெல்லாம் விவாதிக்கப்படலாம்!
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பிறகு அங்குள்ள முக்கிய அரசியல் கட்சிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அதிகார சட்டத்தை நீக்கி, அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்கள் என இரண்டாகப் பிரித்து கடந்த 2019ஆம் ஆண்டு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 22 மாதங்கள் ஆகியும், அங்கு தேர்தலை நடத்தும் பணியும், தொகுதி மறுவரையறை பணியும் தொய்வு நிலையையே உள்ளது. இந்த பணி தொய்வுக்கு இடையில், பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரின் முக்கிய கட்சிகளின் தலைவர்களுடன் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
குப்கர் (Gupkar) என பெயரிடப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் கொண்ட குழுவானது பிரதமருடனான ஆலோசனையில் கலந்துகொள்கிறார்கள். இந்தக் குழுவில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி பரூக் அப்துல்லா ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக இந்த பேச்சுவார்த்தைக்கு ஒன்றிய அரசு சார்பாக அழைப்பு விடுத்த பொழுது, ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் இதனை புறக்கணிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக, ‘பேச்சுவார்த்தையில் நாங்கள் கலந்துகொள்வோம்’ என அறிவித்திருந்தார்கள் அவர்கள். மேலும், பேச்சுவார்த்தையை தாங்கள் வரவேற்பதாகவும், அது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு நன்மை பயப்பதாகவும் இருந்தால் எங்களது அனைத்து கருத்துக்களையும் நாங்கள் முன்வைப்போம் எனவும் பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் கூறியிருந்தார்கள்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொகுதி மறுவரையறை பணிகள் - எப்போது நிறைவடையும் என்றும், அங்கு எப்போது தேர்தலை நடத்தலாம் - ஜம்மு-காஷ்மீருக்கு எப்பொழுது மீண்டும் முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும் உள்ளிட்ட விவகாரங்கள் ஆலோசிக்க உள்ளது.
கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை நீக்கியதற்கு எதிரான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது. மேலும், தொகுதி மறுவரையறை பணிகளை மேற்கொள்ள கூடாது என ஜம்மு காஷ்மீரின் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். பிரதமருடனான இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பாகவும் ஆலோசித்து, இதில் கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என விவாதிக்கப்படுமா என்பது மிக முக்கியமாக எழுந்து இருக்கக்கூடிய கேள்வியாக இருக்கிறது.
இவைமட்டுமன்றி ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரிக்கப்பட்டதற்கு பிறகு, அம்மநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி உமர் அப்துல்லா, அவரது தந்தை ஷேக் அப்துல்லா உள்ளிட்ட ஏராளமான முக்கிய தலைவர்கள் வீட்டு சிறைகளிலும் மற்றும் சிறைச்சாலைகளிலும் அடைக்கப்பட்டிருந்தனர். இன்னும் ஏராளமானோர் சிறைகளில் இப்போதுவரை இருந்து வருகின்றனர். இப்படியாக கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட தலைவர்களும், இப்போது இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள உள்ள நிலையில், பேச்சுவார்த்தையில் ‘அரசியல் கைதிகள் விடுவிப்பு மற்றும் ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை’ தொடர்பான விசாரணை உள்ளிட்டவை எல்லாம் பேசப்படலாம் என தெரிகிறது.
அதேபோல ஏராளமான பொதுமக்களும் கடுமையாக துன்புறுத்தப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்கவும், பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் தலைவர்கள் பேசுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசியல் தளத்தில் எப்பொழுதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் 370 சிறப்பு பிரிவு நீக்கப்பட்டதற்கு பிறகு, அதிமுக்கியமான ஒரு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தின் எதிர்காலம் குறித்த மிக முக்கியமான அம்சங்கள் இந்த கூட்டத்தின் முடிவில வெளிவருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- நிரஞ்சன் குமார்