தொடங்கியது 'ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்' - 'ஒரே நாடு' திட்டங்களை பட்டியலிட்ட பிரதமர் மோடி!
"ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை இருக்கும் சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது" என்று பிரதமர் மோடி பெருமிதம் கூறினார். இத்துடன், 'ஒரே நாடு, ஒரே பயண அட்டை' தொடங்கி 'ஒரே நாடு, ஒரே வேளாண் சந்தை' வரை 'ஒரே நாடு' திட்டங்களைப் பட்டியலிட்டார்.
நாட்டின் ஓட்டுநர் இல்லா முதல் ரயில் போக்குவரத்தை, டெல்லி மெட்ரோ மெஜந்தா வழித்தடத்தில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது:
"2014ம் ஆண்டில் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் இருந்தது. இன்று 18 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. 2025ம் ஆண்டுக்குள் 25க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு இத்திட்டத்தை நாம் விரிவுபடுத்தப் போகிறோம். 2014ம் ஆண்டில் 248 கி.மீ தூரத்துக்கு மட்டுமே மெட்ரோ ரயில் பாதைகள் செயல்பாட்டில் இருந்தன. இன்று சுமார் 3 மடங்குக்கும் அதிகமாக 700 கி.மீட்டருக்கு மேல் உள்ளன. 2025ம் ஆண்டுக்குள், இதை 1700 கி.மீ தூரமாக விரிவுபடுத்த நாம் முயற்சிக்கிறோம். இவை வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல, அவை கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்களது வாழ்க்கையை எளிதாக வாழ்வதற்கான சான்றாகும். இவை செங்கல், கல், கான்கிரீட் மற்றும் இரும்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட கட்டமைப்புகள் மட்டுமல்ல. நாட்டின் நடுத்தர மக்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கான சான்றுகள்.
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சாதனை மூலம், இது போன்ற வசதிகள் இருக்கும் சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. ரயில்கள் நிறுத்தப்படும்போது 50 சதவீத எரிசக்தியானது மின் தொகுப்புக்கு செல்கிறது. மெட்ரோ ரயில் திட்டத்தில் இன்று 130 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இது 600 மெகா வாட்டாக அதிகரிக்கப்படும்.
நவீனமயமாக்கலுக்கான அதே தரத்தையும் வசதிகளையும் வழங்குவது முக்கியமானது. தேசிய அளவிலான பொது பயண அட்டை முக்கியமான நடவடிக்கை. இந்த ஒரு பயண அட்டை, பயணிகள் எங்கு சென்றாலும் எந்த பொது போக்குவரத்தை பயன்படுத்தினாலும் ஒருங்கிணைந்த சேவையை வழங்குகிறது.
பொது பயண அட்டை ஒருங்கிணைப்பு முறை மூலம், நாட்டின் வலிமை திறம்பட ஒருங்கிணைக்கப்படுகிறது. 'ஒரே நாடு, ஒரே பயண அட்டை' மாதிரி, கடந்த காலங்களில் பல செயல்முறைகளை நமது அரசு ஒருங்கிணைத்துள்ளது. ஒரே நாடு, ஒரே பாஸ்ட் டேக் என்பது நாடு முழுவதும் நெடுஞ்சாலை போக்குவரத்தை தடையில்லாமல் ஆக்கியுள்ளது. இது பயணிகளுக்கு தாமதம் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைத்துள்ளது.
ஜிஎஸ்டி போன்ற ஒரே நாடு, ஒரே வரி முறையானது வரி அமைப்பில் உள்ள சிக்கலை முடிவுக்கு கொண்டு வந்து மறைமுக வரியில் சீரான அமைப்பை வழங்கியது. ஒரே நாடு, ஒரே மின்தொகுப்பு முறையானது நாட்டின் அனைத்து பகுதிகளிலும், போதிய மற்றும் தொடர் மின் விநியோகத்தை உறுதி செய்கிறது. மின் இழப்பும் குறைந்துள்ளது.
ஒரே நாடு, ஒரே எரிவாயு விநியோகத் தொகுப்பு, முன்பு எரிவாயு பயன்பாடு கனவாக இருந்த பகுதிகளில், எரிவாயு அடிப்படையிலான வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை உறுதி செய்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் போன்ற ஒரே நாடு, ஒரே சுகாதார காப்பீடு திட்டம் மூலம் கோடிக்கணக்கான இந்திய மக்கள் எங்கு சென்றாலும் பயன் அடைகின்றனர். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குடிபெயரும் மக்கள், ஒரே நாடு, ஒரே ரேசன் அட்டை திட்டம் மூலம், புதிய ரேஷன் அட்டை பெறும் சிக்கலில் இருந்து விடுபட்டுள்ளனர். அதேபோல், புதிய வேளாண் சீர்திருத்தங்கள் மற்றும் இ-நாம் ஏற்பாடு மூலம் ஒரே நாடு, ஒரே வேளாண் சந்தை என்பதை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது" என்றார் பிரதமர் மோடி.