“PM-CARES நிதி அரசு பணமல்ல : வெளிப்படைத்தன்மையுடன் தான் அனைத்தும் நடக்கிறது” - மத்திய அரசு
மத்திய அரசு PM-CARES நிதி அரசு பணமல்ல என்றும், அதன் அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படைத்தன்மையுடன் தான் நடக்கிறது என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தின் ஊடாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்த அறக்கட்டளை மூலம் பெற்றுள்ள நன்கொடை அனைத்திற்கும் முறையான கணக்குகள் இருப்பதாகவும். அதன் விவரங்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் வலைதளத்தில் வெளியாகி உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் பேமெண்ட், காசோலை, வரைவோலை (டிடி) என அனைத்துக்குமான கணக்குகள் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
“இந்த அறக்கட்டளை வழக்கமான அறக்கட்டளைகளைப் போலவே வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் நலக் கொள்கையை அச்சாணியாக கொண்டு செயல்படுகிறது. அதனால் வெளிப்படைத்தன்மை அனைத்திலும் இருக்கும்” பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளதாக PTI செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பிரதம மந்திரி அலுவலகத்தின் செயலாளர் பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா இந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளதாக PTI தெரிவித்துள்ளது.