விக்ரம் லேண்டர் குறித்து விளையாட்டாக ட்வீட் செய்த நாக்பூர் காவல்துறை
விக்ரம் லேண்டர் பின்னடைவு குறித்து நாக்பூர் காவல்துறை வேடிக்கையாக ஒரு ட்வீட் செய்துள்ளது.
சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணி கடந்த சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டது. எனினும் நிலவிலிருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து லேண்டரை தரையிறக்கும் பணி நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று ஆர்பிட்டரின் தெர்மல் புகைப்படம் மூலம் சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டரை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ஆனால் அதிலிருந்து தகவல் தொடர்பு எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே லேண்டருடன் தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என இஸ்ரோ தெரிவித்திருந்தது. இதற்காக ஆர்பிட்டரை நிலவிற்கு அருகில் கொண்டு செல்லும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாக்பூர் காவல்துறையின் சார்பில் விக்ரம் லேண்டருக்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாக்பூர் காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவல் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “டியர் விக்ரம், தயவு செய்து தொடர்புக்கு வாருங்கள். நீங்கள் சிக்னலை மீறியதற்காக நாங்கள் அபராதம் எதுவும் விதிக்க மாட்டோம்” என வேடிக்கையாக பதிவிடப்பட்டுள்ளது.