“பிரியங்காவை பத்திரமா பார்த்துக்கொள்ளுங்கள்” - மக்களுக்கு வதேரா வேண்டுகோள்
பிரியங்காவை இந்திய மக்கள் கையில் கொடுத்துள்ளோம், அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் முதல்முறையாக ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அத்துடன் உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பொறுப்பாளராகவும் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இன்று உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் பிரியங்கா காந்தி பங்கேற்றார். திறந்தவெளி வாகனத்தில் நடந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரியங்காவுடன் பங்கேற்றார். அப்போது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதற்கிடையே பிரியங்கா தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள வதேரா, “இங்கே பழிவாங்கும் மற்றும் தீய அரசியல் சூழ்நிலை உள்ளது. ஆனால் எனக்கு தெரியும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டியது பிரியங்காவின் கடமை. அவரை இப்போது இந்திய மக்களின் கையில் கொடுத்துள்ளோம். தயவு செய்து பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ள வதேரா, “எனது சிறந்த நண்பர், பொருத்தமான மனைவி, என் குழந்தைகளுக்கு சிறந்த தாய்” என பிரியங்காவை புகழ்ந்துள்ளார்.