தண்டவாள சோகம் : தேனீக்களின் ஓசையில் பிழைக்கும் யானைகள்
தண்டவாளங்களில் ரயில் மோதி இறக்கும் யானைகளை காக்க புதிய தேனிக்கள் ஓசை திட்டத்தை அமல்படுத்த ரயில்வேதுறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் 1987 முதல் 2017ஆம் ஆண்டு வரை சுமார் 266 யானைகள் ரயில் விபத்துக்களால் மட்டுமே உயிரிழந்துள்ளன. வேட்டை, உடல்நலக்குறைவு, மின்வேலி ஆகியவற்றின் மூலமாக இறக்கும் யானைகள் ஒருபுறம் என்றால், ரயில் விபத்துகளால் இறக்கும் யானைகள் மறுபுறம். இந்தியாவில் உள்ள ரயில்வே பகுதிகளில் குறிப்பாக 20 பகுதிகளில் இதுபோன்ற விபத்துக்கள் அதிகம் நிகழ்கின்றன. தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இதுபோன்ற விபத்துக்கள் நிகழ்கின்றன. இதுதவிர மேற்கு வங்கத்தின் சாப்ராமாரி வனப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களிலும் இந்த துயர சம்பவங்கள் நிகழ்கின்றன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கூட, ஒடிசாவில் ஜார்சுகிதா மாவட்டத்தின் ரயில்வே பகுதியில் ஹவுரா-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 4 யானைகள் உயிரிழந்தன.
இதுபோன்ற துயர சம்பவங்களை தவிர்க்க இந்திய ரயில்வே புதிய திட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. ரூ.2,000 மதிப்புள்ள கருவி ஒன்றை யானைகள் கடக்கும் ரயில்வே பகுதிகளில் பொருத்துவதே அந்த திட்டமாகும். அந்தக் கருவி யானைகள் 600 மீட்டர் வட்டத்திற்கு வந்தாலே, தேனிக்களின் ஓசையை எழுப்பும். இயற்கையாவே தேனிக்களின் ஓசை என்றால் அலறி ஓடும் யானைகள், இந்த சத்தத்தை கேட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடிவிடும். இதன்மூலம் ரயில் விபத்துகளில் இருந்து யானைகள் உயிரை காக்க முடியும்.
இதற்கு முன்னர் மின்வேலி அமைப்பது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அவை பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த தேனிக்கள் ஓசை திட்டம் மிகவும் பயனளிக்கும் வகையில் உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.