கேரள மாநில காவல்துறையில் ஆர்டர்லி முறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
ஆர்டர்லி முறையில் கான்ஸ்டபிள், எஸ்.ஐ, டி.எஸ்.பி, ஐ.ஜி, டி.ஜி.பி. உள்ளிட்ட 13 நிலைகளில் காவலர் பதவிகள் உள்ளது. அதில் அதிகாரிகளுக்குக் கார் ஓட்டுவது, உதவியாளராய் இருப்பது மட்டும்தான் 'ஆர்டர்லி' வேலை. ஆனால் இந்த வேலைகளை செய்யாமல் , சம்பந்தப்பட்ட அதிகாரியின் வீட்டு வேலைகளை செய்ய இந்த ஆர்டர்லி முறையில் பணியாற்றுவோர் ஈடுபடுத்தப்படுவதாக நீண்ட கால குற்றச்சாட்டு உள்ளது.
கேரள மாநிலத்தில் காவல்துறை ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரியிடம், கவாஸ்கர் என்ற காவலர் ஆர்டர்லி முறையில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் காவலர் கவாஸ்கர் தாமதமாக வந்த காரணத்தால், ஏடிஜிபின் மகள் காவலர் கவாஸ்கரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருதரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், உயரதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் பணி செய்யும் ஆர்டர்லி முறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தகவல் தெரிவித்துள்ளார்.
காவலர்களுக்கு சங்கம் உள்ள கேரளாவிலேயே ஆர்டர்லியில் பணியாற்றிய காவலரை உயர் அதிகாரியின் மகள் தாக்கினார் என்றும் அதற்கு மற்ற யாரும் உரிய குரல் கொடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் எந்த சங்கமோ, அமைப்போ இல்லாத, தமிழகத்தின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம்.