கேரள அரசை குறைகூறிய யோகிக்கு பினராயி விஜயன் பதிலடி
கேரளாவில் சட்டம் ஒழுங்கு, மருத்துவ வசதிகள் சரியில்லை என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் பாதுகாப்பு யாத்திரையை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா துவங்கி வைத்தார். இதில் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய யோகி, கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக தொண்டர்கள் கொல்லப்படுவதாகவும், ஜிஹாத் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் விதமாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு நடந்துகொள்வதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் கேரளாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் மற்றும் மருத்துவ வசதிகள் சரியில்லை எனவும் விமர்சித்திருந்தார்.
இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் உத்தரப் பிரதேசத்திலேயே ஏராளமான பிரச்னைகள் இருக்கும் நிலையில் கேரளாவிற்கு வருவதற்கு ஆதித்யநாத்திற்கு எப்படி நேரம் கிடைத்தது என்பது வியப்பாக உள்ளது என்றும், மேலும் இயற்கை எழில் மிகுந்த கேரளாவிற்கு வந்து சென்றது மூலம் ஆதித்யநாத் புத்துணர்ச்சி பெற்றிருப்பார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேசிய அளவில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் 34 விகிதம். இதில் கேரளாவில் 10 விகிதம். ஆனால் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 43 சதவிதம் ஆக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை வெளி உலகுக்கு தெரிய வைத்த யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி எனவும் கூறியுள்ளார். இறுதியாக சிக்கன்குனியா, டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்கு கேரள அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.