”அனைவரது வேதனை வீண் போகாது” - யானை உயிரிழப்பு குறித்து கேரள முதல்வர்
கர்ப்பிணி யானை வெடிவைத்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப் பழத்தில் வெடி மருந்து வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசு பொருளாகியிருக்கிறது. சமூகத்தில் பல்வேறு தரப்பினரும் யானைக்கு இத்தகைய கொடூரத்தைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த யானையின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதில் "யானை அதிகப்படியான நீரை உறிஞ்சியுள்ளது, இதன் காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டுச் செயலிழந்துவிட்டது. அதுவே யானை உடனடியாக உயிரிழந்ததற்கான காரணம். யானையின் வாய்ப் பகுதி வெடிபொருள்களால் வெடித்துள்ளது, அதனால் அதனுடைய வாய் பகுதி முழுமையாகக் காயப்பட்டு சீழ் பிடித்திருந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வலி, மன உளைச்சல் காரணமாக அந்த யானை கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்திருக்கிறது. இதனால் அந்த யானை முற்றிலுமாக சீர்குலைந்து நீரில் நின்று சரிந்து பின்பு மூழ்கியுள்ளது" என்று அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார் அதில் " பாலக்காட்டில் மிக மோசமான சம்பவம் நடந்திருக்கிறது. கர்ப்பிணியான யானை உயிரிழந்திருக்கிறது. இது தொடர்பாக மக்கள் அனைவரும் கவலை தெரிவித்து வருகின்றனர். அவர்களது வேதனை வீண் போகாது' என்று கூறியுள்ளார்.
மேலும் "மண்ணார்காடு வனச்சரகத்தில் யானை கொல்லப்பட்ட விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர கோழிக்கோட்டிலிருந்து வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவினரும் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

