மகாராஷ்ட்ரா முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: விமானியின் தவறே காரணம்!
மகாராஷ்ட்ர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு விமானியின் தவறே காரணம் என விசாரணை அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிவதற்காக பாஜக ‘ஷிவார் சம்வாத் சபா’ என்ற பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது. இதனையொட்டி அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் வறட்சி பாதித்த மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள லத்தூருக்கு சென்றுவிட்டு ஹெலிகாப்டரில் மும்பை திரும்பினார்.
அந்த ஹெலிகாப்டரில் முதல்வர் பட்நவிஸ், அதிகாரிகள் குழு மற்றும் இரண்டு விமான சிப்பந்திகள் உட்பட மொத்தம் 6 பேர் இருந்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் வானிலை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்த விமானி, அதை அவசரமாக தரையிறக்கினார். நிலங்கா என்ற இடத்தில் ஹெலிகாப்டர் இறங்கும்போது மின்சார வயர்களில் சிக்கியபடி கீழே விழுந்து நொறுங்கியது. முதல்வரும் அதிகாரிகளும் இந்த விபத்தில் காயமின்றி தப்பினர்.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த குழு அமைத்தது. அந்த குழுவின் அறிக்கை நேற்று வெளி யானது. அதில் ஹெலிகாப்டரில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றியதும், அதைக் கண்டுகொள்ளாத விமானி யின் தவறுமே இந்த விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.