விமானம் மாயமானபோது கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய விமானியின் மனைவி!

விமானம் மாயமானபோது கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய விமானியின் மனைவி!
விமானம் மாயமானபோது கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய விமானியின் மனைவி!

மாயமான விமானம் புறப்பட்டுச் சென்றபோது, அதில் சென்ற விமானியின் மனைவி, விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றிய தகவல் இப்போது தெரிய வந்துள்ளது. 

அசாம் மாநிலம் ஜோர்காட் நகரின் விமானப்படை தளத்தில் இருந்து, கடந்த திங்கட்கிழமை பகல் 12.25 மணியளவில் ஏ.என்.32 ரக விமானம் அருணாசல பிரதேசத்தில் உள்ள மெஞ்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது. அதில் 8 விமானிகள், 5 பயணிகள் என 13 பேர் இருந்தனர். இந்த விமானம் சீன எல்லையில் உள்ள சியோமி மாவட்டத்தில் பகல் 1 மணியளவில் சென்றபோது திடீரென மாயமானது. பறக்கத் தொடங்கிய 33 நிமிடத்தில் ரேடார் கருவியில் இருந்து காணாமல் போனதால், விமானப் படை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மாயமான விமானத்தை தேடும் பணிகள் தொடங்கப்பட்டன. இன்னும் கண்டுபிடிக்க முடியாததால், விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

இந்நிலையில் இந்த விமானத்தில் சென்றவர்களில், ஹரியானாவை சேர்ந்த விமானி ஆசிஷ் தன்வார் (29) என்பவரும் ஒருவர். மாயமான விமானம் ஜோர்கார்ட்டில் இருந்து புறப்பட்டபோது, அந்த விமான நிலையத்தின் போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவில் அவர் மனைவி பணியாற்றிக்கொண்டிருந்தார், என்ற தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. 

விமானி ஆசிஷ் தன்வாரின் சித்தப்பா, சிவ் நரைன் கூறும்போது, ’’ஆசிஷிக்கு கடந்த 2018 ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அவர் மனைவி சந்தியா. அவரும் விமான படையில் பணியாற்றுகிறார். அந்த விமானம் திங்கட்கிழமை புறப்பட்டபோது, விமான போக்குவரத்து கன்ட்ரோல் ரூமில் இருந்தார் சந்தியா. விமானம் மாயமானதை அடுத்து அவர்தான் எங்களுக்கு தகவல் சொன்னார். முதலில் அந்த விமானம் தவறுதலாக சீன எல்லைக்கு சென்றிருக்கும் என்றும் அங்கு தரையிறங்கி இருக்கலாம் எனவும் நினைத்தோம். ஆனால், மலையில் எங்காவது மோதியிருக்கும் என இப்போது தகவல்கள் வந்திருப்பது கவலை அளிக்கிறது. கடந்த மாதம் 2 ஆம் தேதி ஆசிஷூம், சந்தியாவும் வீடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்தனர். 26 ஆம் தேதி பாங்காக் சென்றுவிட்டு, அசாம் திரும்பினர். இப்படிநடக்கும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை’’ என்றார்.

ஆசிஷின் மாமா உடைவீர் சிங் கூறும்போது, ‘’ஆசிஷ் சின்ன வயதிலேயே ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தவர். பி.டெக் முடித்துவிட்டு விமானப்படையில் சேர்ந்தார். வீட்டில் மொத்தம் ஆறுபேர். அதில் ஐந்து பேர் பாதுகாப்புத் துறையில்தான் பணியாற்றுகின்றனர். அசிஷின் அப்பாவும் முன்னாள் ராணுவ வீரர்தான். தகவல் அறிந்ததும் ஆஷின் அம்மாவால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறார். அழுகையை நிறுத்திவிட்டு அவரால் பேசக் கூட முடியவில்லை’’ என்றார்.

பல்வாலில் உள்ள ஆசிஷ் வீட்டில் அவரது குடும்பத்தினர், கவலையுடன் கூடியுள்ளனர். ஆசிஷின் தந்தை ராதே லால் அசாமுக்கு விரைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com