“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்

“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்
“எனக்கு ஊன்றுகோலே போதும்” - மாற்று திறனாளியின் ‘கிளிமாஞ்சாரோ’ பயணம்

மாற்றுத் திறனாளிகளை எப்போதும் மற்றவர்கள் பார்க்கும் போது ஒரு பாவமான கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள். ஆனால் இந்தக் கண்ணோட்டத்தை அவர்கள் எப்போதும் விரும்பியதில்லை. ஏனென்றால் இயல்பாகவே மாற்றுத்திறனாளிகள் அதிக தன்னம்பிக்கை உடையவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வாழ்வில் சாதிக்கும் துடிப்புடன் இருப்பார்கள். அந்த துடிப்புடன் அவர்கள் சாதித்து கொண்டும் இருக்கிறார்கள். அந்த வகையில் மாற்றுத் திறனாளி ஒருவர் தனது விடா முயற்சியாலும், சாதிக்கும் துடிப்பாலும் ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ளார். 

கேரளா மாநிலம் ஆலூவா பகுதியை சேர்ந்தவர் நீரஜ் ஜார்ஜ் பேபி. இவரின் 9ஆவது வயதில் காலில் ஒரு டியூமர் கட்டி வந்துள்ளது. இந்தக் கட்டியை அகற்ற வேண்டும் என்றால் இவரது காலை எடுக்கவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். பின்னர், இவரது இடது கால் அகற்றப்பட்டது. ஒரு கால் இல்லாத புதிய வாழ்க்கையை அவர் வாழ தொடங்கினார். ஊன்று கோல் உதவியுடன் நடக்க ஆரம்பித்துள்ளார். செயற்கை கால்களுக்கு பதிலாக ஊன்று கோலையே அவர் தேர்வு செய்துள்ளார். அது தான் தனக்கு நடப்பதற்கு மிகவும் சுலபமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். 

இத்தகைய சூழ்நிலையில்தான் நீரஜ் ஜார்ஜ்க்கு ஒரு யோசனை வந்துள்ளது. செயற்கை கால்கள் வைக்காமல் ஊன்று கோலின் உதவியுடன் நடக்கும் மாற்றுத் திறனாளிகளாலும் சாதிக்க முடியும் என்பதை காட்ட வேண்டும் என்று நினைத்துள்ளார். இதற்காக அவர் எடுத்த முடிவுதான் ஆச்சர்யமானது. ஊன்று கோல்களின் உதவியுடன் ஆப்பிரிக்காவின் பெரிய மலையான கிளிமாஞ்சாரோவை ஏறி சாதிக்க வேண்டும் என்பதுதான் அந்த முடிவு. இதற்காக அவர் எடுத்துக் கொண்ட பயிற்சி கொஞ்சம் நஞ்சமல்ல. கிட்டதட்ட ஐந்து வருடம் மிகவும் கடினமான பயிற்சியை எடுத்துக் கொண்டார். 

தனது ஐந்து வருட கனவை நிறைவேற்றி கடந்த புதன்கிழமை அவர் சாதனைப் படைத்துள்ளார். தன்னுடைய நீண்டநாள் கனவு நிறைவேறியுள்ளது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். “இது எனது வாழ்நாளில் மிகவும் முக்கியமான தருணம். என்னுடைய ஐந்து ஆண்டு கனவு தற்போது நிறைவேறியுள்ளது. இதனை நிறைவேற்ற நான் மிகுந்த வலியுடனும் கடின முயற்சியுடனும் செயல்பட்டேன். செயற்கை கால்கள் இல்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளால் சாதிக்க முடியும் என்பதை காட்டுவதற்காகவே நான் இதனைத் செய்தேன். செயற்கை கால்களுக்கு நீங்கள் ஜிஎஸ்டி வரி மற்றும் பிற வரிகள் விதித்தாலும் நாங்கள் எங்களது கனவை நிறைவேற்றுவோம்” என நம்பிக்கையுடன் அந்த பதிவில் கூறியுள்ளார். 

நீரஜ் ஜார்ஜின் இந்த சாதனையால் அவரது தாய் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றார். தன் மகனின் சாதனை குறித்து அவர் பேசியபோது, “1996ஆம் ஆண்டு நீரஜிற்கு கால் எடுக்கும் அறுவை சிகிச்சை செய்த போது நான் மிகவும் வருத்தத்தில் இருந்தேன். ஒரு கால் இல்லாமல் எனது மகன் என்ன செய்வானோ? என நினைத்து நான் மிகவும் கவலை அடைந்தேன். அறுவை சிகிச்சைக்கு பிறகு ஜார்ஜ்க்கு நடை பயிற்சி அளித்த பிசியோ தெரபிஸ்ட், ‘நீங்கள் கவலைப் படதாதீர்கள் உங்கள் மகன் நிச்சயம் வாழ்வில் சாதனை படைப்பான்’ என்று எனக்கு ஆறுதல் கூறினார். அவர் கூறியது போல தற்போது எனது மகன் இந்தச் சாதனையை படைத்துள்ளான்” என கண்கலங்க தெரிவித்தார். 

நிரஜின் சகோதரி நிநோ பேபி பேசும் போது, “கிளிமாஞ்சாரோவில் ஏறப்போகிறேன் என்று தன்னுடைய ஆசையை ஜார்ஜ் சொன்ன போது நாங்கள் அதை பெரிதாக கருதவில்லை. ஆனால், அதற்காக அவன் மேற்கொண்ட தீவிர பயிற்சியை பார்த்தவுடன் எங்களுக்கு நம்பிக்கை வந்தது. மிகவும் கடின உணவு கட்டுபாட்டுடன் அவன் இருந்தான். அவனுடைய மொத்த உடல் எடையையும் இரண்டு கைகளால் தாங்கி தான் மலை ஏறியுள்ளான். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” எனக் கூறியுள்ளார். 

இந்த சாதனையை தாண்டி நீரஜ் ஜார்ஜ் பேட்மிண்டனில் பல சாதனைகளை படைத்துள்ளார். அவர் இந்தியா சார்பில் பாரா பேட்மிண்டன் போட்டிகளிலும் பங்கேற்று உள்ளார். இவர் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா பேட்மிண்டன் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் தங்கமும், ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.  தனது ஒரு காலினை இழந்த பிறகும் முடங்கி விடாமல் நீரஜ் ஜார்ஜ் செய்திருக்கும் சாதனைகள் ஒவ்வொரு மனிதருக்கும் உத்வேகத்தை அளிக்கும் என்பதில் வியப்பில்லை. கிளிமாஞ்சாரோ பயணத்தை முடித்துக் கொண்டு இந்த மாதம் 25ஆம் தேதி அவர் இந்தியா திரும்புகிறார். இவரை உற்சாமாக வரவேற்க இவரது குடும்பத்தினர் ஆவலுடன் உள்ளனர்.    

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com