10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 72% மதிப்பெண்கள்.. 58 வயதில் சாதித்த ஒடிசா எம்.எல்.ஏ

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 72% மதிப்பெண்கள்.. 58 வயதில் சாதித்த ஒடிசா எம்.எல்.ஏ
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 72% மதிப்பெண்கள்.. 58 வயதில் சாதித்த ஒடிசா எம்.எல்.ஏ

ஒடிசாவைச் சேர்ந்த 58 வயதான எம்.எல்.ஏ. அங்கட் கன்ஹர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 72 சதவிகித தேர்ச்சியுடன் வெற்றிபெற்றுள்ளார்.

ஒடிசாவில் கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்தத் தேர்வை அம் மாநிலம் முழுவதும் 5.8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதியிருந்தனர். அவர்களோடு புல்பானி தொகுதி பிஜு ஜனதா தளம் எம்.எல்.ஏ. அங்கட் கன்ஹரும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார். கந்தமால் மாவட்டம், பிதாபரி கிராமத்தில் அமைந்துள்ள ருஜன்ஜி உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியரோடு இணைந்து எம்எல்ஏ அங்கத கன்ஹரும் தேர்வு எழுதியிருந்தார்.

இந்நிலையில் இன்று 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அம்மாநிலத்தில் வெளியாகியுள்ளது. இதில் அங்கட் கன்ஹர் 500 மதிப்பெண்களுக்கு 364 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். அதுவும் முதல் வகுப்பில், பி1 கிரேடும் பெற்றுள்ளார். 72 சதவிகித தேர்ச்சி பெற்றதால் அங்கட் கன்ஹர் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். சுதந்திரமாக நான் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு ஒடிசாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், புல்பானி தொகுதியில் பிஜு ஜனதா தளம் சார்பில் அங்கட் கன்ஹர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். முன்னதாக தேர்வு எழுதும்போது “கடந்த 1978-ம் ஆண்டில் நான் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியிருக்க வேண்டும். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அப்போது பொதுத்தேர்வை எழுத முடியவில்லை. அதன்பிறகு கடந்த 1984-ம் ஆண்டில் பஞ்சாயத்து அரசியலில் கால் பதித்தேன்.

இப்போது எம்எல்ஏவாக மக்களுக்கு சேவையாற்றி வருகிறேன். சமீபத்தில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பலர் தேர்வு எழுதுவதாக தெரியவந்தது. இதையடுத்து நானும் தேர்வு எழுத விண்ணப்பித்தேன். இதன்மூலம் தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. தேர்வு எழுதவோ, கல்வி கற்கவோ வயது தடை இல்லை” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com