’அந்த நேரத்துல அம்மா மட்டும் போன் பண்ணலைன்னா..’ - பெங்களூரு குண்டுவெடிப்பில் தப்பித்த பீகார் இளைஞர்!

தனது தாயிடம் இருந்து வந்த அழைப்புதான் தன்னை குண்டுவெடிப்பில் இருந்து காப்பாற்றியதாக பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
குமார் அலங்கிரித்
குமார் அலங்கிரித்ட்விட்டர்

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு வைட் பீல்ட் அருகில் உள்ள, குந்தலஹாலி பகுதியில் இயங்கிவரும் பிரபல ’ராமேஸ்வரம் கபே’ உணவகத்தில் நேற்று (மார்ச் 1) மதியம் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இந்த விபத்தில் உணவகத்தில் பணிபுரிந்த 3 பேர், சாப்பிட வந்த பெண் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன், என்ஐஏ அதிகாரிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, தனது தாயிடம் இருந்து வந்த அழைப்புதான் தன்னை குண்டுவெடிப்பில் இருந்து காப்பாற்றியதாக பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அவரது பெயர் குமார் அலங்கிரித். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதுடன், தினம் ராமேஸ்வரம் கபே உணவகத்தில் சாப்பிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அவர், ’தாம் வழக்கம்போல் ’ராமேஸ்வரம் கபே’ உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றேன். உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்த சமயத்தில், தன் தாயிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது சிக்னல் கிடைக்காததால் வெளியில் வந்து பேசிக்கொண்டிருந்தேன். நான் வந்த சில வினாடிகளில்தான் அந்த உணவகத்தில் பயங்கர சத்தம் கேட்டது.

முதலில் உணவகத்தில் இருந்த சிலிண்டர் வெடித்துவிட்டதாகவே அங்கிருந்த எல்லோரும் நினைத்தோம். அதன்பின்னரே அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது தெரிய வந்தது. இதில் சில நொடிகள் எனது காது உணர்வற்றுப் போனது. அனைவரும் ஹோட்டலில் இருந்து வெளியே ஓடத் தொடங்கினர். குண்டுவெடிப்பில் உணவகத்தில் இருந்தவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. தனது தாயிடம் இருந்து வந்த அழைப்புதான் தன்னை குண்டுவெடிப்பில் இருந்து காப்பாற்றியது. தாய்மார்கள் கடவுளுக்குச் சமமானவர்கள் என்பது நேற்றைய சம்பவத்தின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com