2018 ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றமும் இறக்கமும்
2018ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டது. தற்போது விலை கீழிறங்கத் தொடங்கி இருக்கிறது. சென்னையில் இந்த ஆண்டில் பெட்ரோல், டீசல் விலை நிலவரங்களைப் பார்க்கலாம்.
2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 72 ரூபாய் 53 பைசா விற்றது. அடுத்து வந்த மாதங்களில் பெட்ரோல் விலை ஏற்றத்தில் காணப்பட்ட நிலையில், மார்ச் 1ஆம் தேதி பெட்ரோல் ஒரு லிட்டர் 74 ரூபாய் 21 காசுகளுக்கும், மே 1ஆம் தேதி 77 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், அடுத்து வந்த மாதங்களில் பெட்ரோல் விலை உச்சத்தைத் தொட்டு அனைவரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியது.
ஜூலை 1ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 78 ரூபாய் 40 காசுகளுக்கும், செப்டம்பர் 1ஆம் தேதி 81 ரூபாய் 75 காசுகளுக்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து அக்டோபர் 4ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் புதிய உச்சமாக 87 ரூபாய் 33 காசுகளுக்கு விற்பனையானது. தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் சர்ச்சை எழுப்பி வந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் குறைந்து வந்த பெட்ரோல் விலை, ஆண்டின் கடைசி நாளான இன்று 71 ரூபாய் 62 காசாக குறைந்தது. இதுவே 2018ம் ஆண்டில் பெட்ரோலின் குறைந்த விலையாகும்
அதேபோல், ஜனவரி 1ஆம் தேதி 62 ரூபாய் 90 காசுகளுக்கு விற்ற டீசல், அடுத்து வந்த மாதங்களில் சற்று அதிகரித்தே காணப்பட்டது. மார்ச், மே, ஜூலை ஆகிய மாதங்களில் டீசல் விலை ஒரு லிட்டர் முறையே 65 ரூபாய் 63 காசுகள், 69 ரூபாய் 56 காசுகள் மற்றும் 71 ரூபாய் 12 காசுகளுக்கு விற்கப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் 1ஆம் தேதி 74 ரூபாய் 41 காசுகளாக அதிகரித்த டீசல் விலை, அக்டோபர் 17ஆம் தேதியன்று புதிய உச்சமாக 80 ரூபாய் 4 காசுகளுக்கு விற்கப்பட்டது. அடுத்து வந்த மாதங்களில் டீசல் விலை குறைந்து வந்த நிலையில், ஆண்டின் இறுதி நாளில் 66 ரூபாய் 59 காசாக குறைந்தது.