பெட்ரோல், டீசல் விலை குறித்த கேள்வி - பொறுமை இழந்து சீறிய பாபா ராம்தேவ்!

பெட்ரோல், டீசல் விலை குறித்த கேள்வி - பொறுமை இழந்து சீறிய பாபா ராம்தேவ்!
பெட்ரோல், டீசல் விலை குறித்த கேள்வி - பொறுமை இழந்து சீறிய பாபா ராம்தேவ்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து யோகா குரு பாபா ராம் தேவ் சில வருடங்களுக்கு முன்பு தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக நிருபர் ஒருவர் இன்று கேள்வியெழுப்பினார். இந்தக் கேள்வியால் பொறுமை இழந்த யோகா குரு பாபா ராம்தேவ், அவரை கடுமையாக வசைபாடினார்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவை ஆதரித்து பாபா ராம்தேவ் பேசி வந்தார். அப்போது ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், "எனக்கு தெரிந்த வரை, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.40- ஐ தாண்ட கூடாது; அதேபோல, சமையல் எரிவாயு லிட்டருக்கு ரூ.300-ஐ தாண்ட கூடாது. இதுதான் நான் அறிந்த பொருளாதாரம். இந்த விலையை உறுதி செய்யும் அரசாங்கத்தை தான் நாம் ஆதரிக்க வேண்டும்" என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஹரியானா மாநிலம் கர்னானில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாபா ராம்தேவ் கலந்து கொண்டார். அப்போது அவர், "பண வீக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறைந்தால், தங்களின் வரி வருவாய் குறைந்து விடும் என அரசு கூறுகிறது. அப்படி நடந்தால் அரசால் எப்படி நாட்டை கொண்டு செல்ல முடியும்? எப்படி அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும்? சாலைகளை எவ்வாறு அமைக்க முடியும்? பணவீக்கம் குறைய வேண்டும். அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், பணவீக்கம் இருக்கும் வரை மக்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பணம் ஈட்ட வேண்டும். துறவியான நானே அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை உழைக்கிறேன்" எனக் கூறினார்.

அப்போது அங்கிருந்த செய்தியாளர் ஒருவர், பெட்ரோல், சமையல் எரிவாயு விலை தொடர்பாக பாபா ராம்தேவ் 2014-ம் ஆண்டு தெரிவித்த கருத்து குறித்து கேள்வியெழுப்பினார். இதனால் கோபமடைந்த ராம் தேவ், "ஆமாம், நான் தான் அப்படி கூறினேன். உங்களால் என்ன செய்ய முடியும்? இதுபோன்ற கேள்விகளை கேட்காதீர்கள். நான் என்ன உங்களுக்கு ஒப்பந்தக்காரரா? நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் நாம் பதிலளிக்க வேண்டுமா? வாயை மூடுங்கள். திரும்பவும் கேள்வி கேட்காதீர்கள். அது நல்லதல்ல. உங்களை பார்த்தால் நல்ல பெற்றோருக்கு பிறந்ததை போல இருக்கிறீர்கள். இனி இதுபோல பேசாதீர்கள்" என ராம்தேவ் கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் முடிவடைந்த பிறகு கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com