‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு

‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு

‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
Published on

இந்தியா முழுவதும் குளங்களுடன் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சுபம் அவஸ்தி, சப்தரிஷி மிஸ்ரா ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் குளத்துக்கு அருகே சிவலிங்கம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பல ஆண்டுகளாக முஸ்லிம்கள் தங்கள் உடலை சுத்தம் செய்யும் சடங்கில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது, புனிதமான சிவலிங்கத்தை வேண்டுமென்றே அவமதிக்கும் நடவடிக்கை மட்டுமல்லாமல் இந்து கடவுள்களின் மீதான வெறுப்புணர்வையும் இந்த செயல் பிரதிபலிக்கிறது. இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக முஸ்லிம்களின் இந்த செயல்பாடு அமைந்துள்ளது.

அதேபோல, இந்து, சீக்கிய, பவுத்த மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் இடைக்காலத்தில் இடிக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே . எனவே அந்த இடத்தில் இருக்கும் பழங்கால கடவுள் சிலைகள், சிற்பங்கள் முதலியவை சம்பந்தப்பட்ட மதத்தினருக்கே சொந்தமானவை ஆகும். அவற்றை மீட்டெடுத்து அவர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டியது அவசியம். எனவே நாடு முழுவதும் குளங்கள் மற்றும் குட்டைகளுடன் அமைந்திருக்கும் மசூதிகளில் ரகசிய ஆய்வை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அப்போதுதான் தேவையில்லாத மத வெறுப்புணர்வுகள் தவிர்க்கப்படும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வாரணாசியின் ஞானவாபி மசூதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சிவலிங்கம் கண்டறியப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான ஆய்வறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது சிவலிங்கம் அல்ல; தாங்கள் தொழுகைக்கு முன்பு உடலை சுத்தம் செய்ய பயன்படுத்தும் செயற்கை நீரூற்று என மசூதி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com