கர்நாடக பாரம்பரிய விளையாட்டு ‘கம்பளா’ - தடை கோரி பீட்டா புதிய மனு
கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டான கம்பளாவை தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது. இதேபோன்று கர்நாடகத்தில் கம்பளா எனும் எருமை ஓட்டப்பந்தயப் போட்டி பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது. இந்தப் போட்டி கர்நாடகாவில் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பல்வேறு பகுதிகளில் நடைபெறும். குறிப்பாக கடலோர மாவட்டங்களாக உடுப்பி, தக்ஷின ஆகிய இடங்களில் இது புகழ்பெற்ற விளையாட்டாகும். சேறு நிரம்பியிருக்கும் வயல்பகுதிகளில் எருமைகள் வண்டிகளில் பூட்டி, அதன்பின்னே விவசாயிகளும் சேர்ந்து ஓடுவார்கள் இந்த போட்டி நடத்துவதால் விவசாயத்தில் விளைச்சல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை கர்நாடக மக்கள் மத்தியில் உண்டு. அத்துடன் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போல, அங்கேயும் இதை வீர விளையாட்டாக கருதுகின்றனர்.
இந்தப் போட்டியில் எருமைகள் கொடுமைப்படுத்தப்படுவதாக விலங்குகள் நல அமைப்பான பீட்டா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கடந்த ஆண்டு தடை பெற்றது. பின்னர் அங்கு கர்நாடக அரசால் அவசரச்சட்டம் இயற்றப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் பீட்டா மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் கம்பளா போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டிருந்தது. அத்துடன் கர்நாடக அரசு இயற்றிய சட்டம் காலவதியாகி விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் பீட்டாவின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதனால் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும் கம்பளா போட்டிகள் கர்நாடகத்தில் நடத்தப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கம்பளா போட்டியை தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. நவம்பர் மாதத்திற்கு இன்னும் 45 நாட்களே உள்ள நிலையில் இந்த புதிய மனுவை பீட்டா தாக்கல் செய்துள்ளது. இதற்கு முன்னர் கூறிய அதே காரணங்களை சுட்டிக்காட்டி இந்த முறையும் பீட்டா தடை கோரியுள்ளது.