பாலியல் வன்கொடுமை செய்தவர்களை விரட்டி கடித்த வளர்ப்பு நாய்!
பாலியல் வன்கொடுமை செய்தவர்களிடம் இருந்து சிறுமியை வளர்ப்பு நாய் காப்பாற்றியுள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சாகர் அருகேயுள்ள கரீலா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 14 வயது சிறுமியான இவரிடம் சனிக்கிழமை இரவு புகைமூட்டம் போட, வைக்கோல் எடுத்துவரும்படி சொன்னார் பாட்டி. அதை எடுக்க வெளியே வந்தார் ரமா. அதைக் கவனித்த அங்கிருந்த ரேஷூ அஹிர்வார் (39), புனித் (24) ஆகியோர் ரமாவை மிரட்டி கடத்தினர். பின்னர் அருகிலுள்ள ஆளில்லாத வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சிறுமி காப்பாற்றும்படி கத்தினாள்.
இதைக் கேட்ட சிறுமியின் வளர்ப்பு நாய் அங்கு பாய்ந்து சென்று ரேஷூவை விரட்டி விரட்டி கடித்தது. அவன் நாயை கத்தியால் தாக்கினான். அதையும் மீறி தொடர்ந்து விரட்டி கடித்ததால், பயந்து போன அவன் ஓடினான். இதையடுத்து சிறுமி அங்கிருந்து வீட்டை நோக்கி ஓடியுள்ளாள். சிறுமியின் கூப்பாடு கேட்டும் நாயின் தொடர் சத்தம் கேட்டும் அக்கம் பக்கத்து வீட்டினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது ரேஷும் புனித்தும் தப்பி ஓடியது தெரியவந்தது.
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.