டெல்லியில் சமீபத்தில் திறக்கப்பட்ட சிக்னேச்சர் பாலத்தில் உயிரை பணயம் வைத்து மக்கள் செல்பி எடுத்து வருகின்றனர்.
நர்மதா நதியின் குறுக்கே டெல்லியில் பொதுமக்களின் நலனுக்காக சிக்னேச்சர் பாலம் கட்டப்பட்டது. இப்பாலத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று திறந்து வைக்க பயன்பாட்டிற்கு வந்தது. கிட்டத்தட்ட 1500 கோடி ரூபாய் செலவில் 15 வருட உழைப்பிற்கு பின் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இப்பாலம் மூலம் வட மற்றும் வடமேற்கு டெல்லிக்கு இடையிலான போக்குவரத்து நேரம் முன்பை விட குறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வஜிராபாத் பாலத்தை பயன்படுத்தியவர்கள் சிக்னேச்சர் பாலத்தை பயன்படுத்தி வருவதால் வஜிராபாத் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.
இந்நிலையில் பாலத்திறப்பிற்கு பின் போலீசாருக்கு புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. பாலத்தை சுற்றுலாதளம் போல பாவிக்கும் பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து மக்கள் செல்பி எடுத்து வருகின்றனர். செல்பி எடுப்பதற்காகவே பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருவதாக கூறப்படுகிறது. பாலத்தை கடந்து செல்வோர் பாலத்தில் நின்று விதவிதமாக செல்பி எடுத்து மகிழ்கின்றனர். சிலர் பாலத்தில் வாகனத்தை ஓட்டியபடியும், கார்களில் தொங்கியபடியும் உயிரை பணயம் வைத்து செல்பி எடுத்து வருகின்றனர். இந்த செல்பி பிரச்னை டெல்லி அரசுக்கு பெரிய தலைவலியை உண்டாக்கியுள்ளது.
இது இப்படியே தொடர்ந்தால் அசம்பாவிதங்கள் நடக்கும் என்று செய்வதறியாது இருக்கின்றனர் டெல்லி காவலர்கள். முடிந்தவரை மக்களிடையே செல்பியின் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், ஒவ்வொருவரையும் காவலர்கள் தனியாக பின்தொடர்ந்து கண்காணிக்க முடியாது என்றும், மக்களே விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

