கேரளாவில் நிஜத்தில் ஒரு ‘சந்திரமுகி பங்களா’ - செல்பி எடுக்க படையெடுக்கும் மக்கள்

கேரளாவில் நிஜத்தில் ஒரு ‘சந்திரமுகி பங்களா’ - செல்பி எடுக்க படையெடுக்கும் மக்கள்
கேரளாவில் நிஜத்தில் ஒரு ‘சந்திரமுகி பங்களா’ - செல்பி எடுக்க படையெடுக்கும் மக்கள்

கேரளாவில் மர்மமான முறையில் கொலைகள் நடந்ததாக கூறப்படும் உமா மந்திரம் என்ற பங்களாவில் பொதுமக்கள் பலர் செல்பி எடுத்து செல்கின்றனர். இந்த பங்களா குறித்து பல ஸ்வாரஸ்யமான, அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

“பல ஆண்டுகளாக கேட்பாரற்று பூட்டியே கிடந்த இந்த வீட்டில் முன் நின்று இப்போது எல்லோரும் செல்பி எடுத்து கொல்கிறார்கள். ஆகவே இந்த வீடு இப்போது பிரபலமாகிவிட்டது” என்கிறார் கல்லூரி மாணவர் ரஞ்சித். இந்த வீட்டுக்குப் பக்கத்து விட்டுக்காரர் இவர். ஏன் இந்த வீடு இவ்வளவு பிரபலமாக உள்ளது. வெளியில் இருந்து பார்த்தால் அந்த வீடு பாழடைந்த நிலையில்தான் உள்ளது. இது பெரிய அரண்மனை. ராஜ குடும்பத்தின் சாயல் வீட்டில் தென்படுகிறது. தேசப் போராட்ட வீரர்கள் புகைப்படங்கள் சுவரில் தொங்குகின்றன. திருவனந்தபுரம் கூடத்தில் உள்ள ‘உமா மந்திரம்’ வீடு இன்று பெரிய பிரபலம். காரணம்? அது ஒரு பேய் பங்களாவாக மாறி இருப்பதுதான்.

இந்த வீட்டில்தான் 1991 ஆம் ஆண்டில் இருந்து 2017 வரை தொடர்ந்து ஆறு கொலைகள் மர்மமான முறையில் நடந்துள்ளது. அப்போது இந்த வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கும் ரஞ்சித் குழந்தையாக இருந்தார். ஆகவே அவருக்கு இந்தக் கொலை சமாச்சாரம் எதுவும் தெரியாது.

இந்தக் கொலைக்கான பின்புலம் குறித்து விசாரிக்க வேண்டி அக்டோபர் 16 ஆம் தேதி பிரசன்னா குமாரி என்ற 79 வயது பெண்மணி, கேரள காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹ்ராவிடம் மறைந்த தன் கணவரின் உறவினர்களான ஜெயபிரகாஷ் நாயர், ஜெயாமாதவன் நாயர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதனை விசாரிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார். 2012 முதல் 2017 வரையில் இந்த மரணங்கள் நடைபெற்றுள்ளதாக அவர் கூறியிருந்தார். இதனை அடுத்து விவகாரம் சூடு பிடித்தது. இந்த மரணம் குறித்து குடும்பத்தை கவனித்து வந்த ரவீந்திரன் நாயர் ஒன்றுமே தகவல் கூறவில்லை என்றும் மேலும் அவர் குடும்ப சொத்தை அபகரித்தும் உள்ளார் என்றும் பிரசன்ன குமாரி கூறியிருந்தார்.

“பிரசன்ன குமாரி புகார் கொடுப்பதற்கு முன்பே நான் கடந்த 2018 ஆண்டு ஜூன் மாதம் 11 தேதி ஒரு அடிப்படையான புகாரை கொடுத்துள்ளேன்” என்கிறார் 46 வயதான அணில் குமார் காலடி. இவர்தான் இந்தக் கொலை குறித்த சந்தேகத்தை முதன்முதலாக வெளியில் கொண்டு வந்தவர். இவர் ஒரு சமூக செயல்பாட்டாளர். 

கூடத்தில் குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டு ஏறக்குறைய பல ஆண்டுகள் கடந்து விட்டன. கூடத்தில் உள்ள உமா மந்திரம் வீட்டில்தான் அந்தக் கொலைகள் நடந்துள்ளது. ஏறக்குறைய இவ்வீடு 50 ஆண்டுகள் பாரம்பரியமான வீடு. கொலைச் சம்பவம் குறித்த விசாரணைக்காக கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி காவல்துறையினர் வந்து போனார்கள். அந்த விசாரணை செய்தி பல ஊடகங்களில் பெரிதாக வெடித்தது. ஆகவே பொதுமக்களின் கண்களில் இந்த வீடு விழுந்தது. இப்போது ரஞ்சித் சொல்வதை போல பலரும் வந்து வீட்டுக்கு முன் நின்று செல்பி எடுத்து செல்கின்றனர். இந்த வீட்டில் அந்தக் கால புகைப்படங்களும் ராஜ கும்பத்தினருக்கான சில அடையாள சின்னங்களும் இருப்பதால் மக்களுக்கு இன்னும் கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. 

இந்தக் கொலை சம்பவம் சார்ந்த குற்றச்சாட்டு எழுந்த பிற்பாடு பலரும் கோழிக்கோட்டில் நடந்த ஜோலி ஜோசப் கொலைக்கும் இதற்கும் முடிச்சுப் போட்டு பேசி வருகிறார்கள். ஆனால் இந்தக் கொலை சம்பவத்திற்கும் இதற்கும் ஒரு தொடர்புமே இல்லை எனக் காவல்துறை மறுத்துள்ளது. மேலும் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குடும்பத்தை கவனித்து வந்த இருவர் மீதும் இரண்டு வீட்டு வேலையாட்கள் மீதும் முன்னாள் மாவட்ட கலெக்டர் உட்பட எட்டு பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் இவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தாங்கள் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இதில் சிலர் முன் ஜாமீன் கேட்டு மனு போட்டுள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது. 

இக்குடும்பத் தலைவரான கோபிநாதன் நாயர் திருவனந்தபுர ராஜாவான பாலகிருஷ்ணன் பிள்ளையின் நெருங்கிய உறவினர் ஆவார். பாலகிருஷ்ண பிள்ளைக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். வேலிப்பிள்ளை, நாராயணன், கோபிநாதான் ஆகிய மூவர்தான் அவர்கள். 

1991 ஆம் ஆண்டு உமா மந்திரம் வீட்டில் ஜெயஸ்ரீ என்பவர்தான் முதன்முதலாக இறந்துள்ளார். இவர் கோபிநாதன் நாயரின் மகள் ஆவார். இருபது வயதில் இவர் திடீரென்று இறந்துள்ளார். இது ஒரு தற்கொலை எனக் கூறப்படுகிறது. ஆனால் பிரேத பரிசோதனை எதுவும் நடத்தப்படவில்லை. இவர் ஒரு இளைஞரை காதலித்ததாகவும் ஆனால் வீட்டார் அதற்கு சம்மதம் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆகவே அவர் பூச்சி மருந்து குடித்து மரணத்தை தழுவியதாக சொல்லப்படுகிறது. 

அதே போல 1992 ஆம் ஆண்டு கோபிநாதன் பெரிய மகன் ஜெயபாலகிருஷ்ணன் இதே போல மரணம் அடைந்துள்ளார். இவருக்கு அப்போது வயது 28. இவரது தந்தை வழி உறவினராக உன்னிக்கிருஷ்ணன் நாயர் இதே வீட்டில் இறந்துள்ளார். இவர் வேலுப்பிள்ளையின் மகன். இவர் ஒரு சிறுவன். இந்த மரணங்கள் எதுவும் போலீஸில் பதிவாகவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோபிநாதான் நாயன் 1998ல் இறந்துள்ளார். சுமுகி அம்மா என்பவர் பத்து ஆண்டுகள் கழித்து இறந்துள்ளார். இவர்கள் இறக்கும் போது இருவருக்கும் 70 வயது என கூறப்படுகிறது. இந்த மரணங்கள் மட்டுமே இயற்கையானது என குடும்ப உறுப்பினர்கள் நம்புகிறார்கள். இப்போது பிரசன்ன குமாரி கொடுத்த புகார் மூலம் புதைக்கப்பட்ட பல சம்பவங்கள் வெளியே வரத் தொடங்கி உள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com