காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைக்கிறது? - விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
காஷ்மீரில் மெகபூபா முஃப்தி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக தனது ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்ததால், ஜம்மு காஷ்மீரில் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்து ஆட்சி கவிழ்ந்தது. பின்னர், யாரும் ஆட்சி அமைக்க முன்வராததால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்த நிலையில் 3 பிடிபி எம்.எல்.ஏ.க்கள் மெஹபூபா முப்ஃதிக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர். கட்சியில் இருந்து விலகுவதாக 3 எம்.எல்.ஏ.க்களும் அறிவித்துள்ளனர். மெஹபூபாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இம்ரான் ரஷா அன்சாரி, மெஹபூபா திறமையில்லாதவர் என்றும் மெஹபூபாவின் அலட்சியத்தால் ஆட்சியை இழந்து நிற்பதாகவும் விமர்சனம் செய்துள்ளார்.
மெஹபூபாவின் குடும்பத்தினர் கட்சி விவகாரங்களில் தலையிடுவதாகவும், மெஹபூபா அது குறித்தெல்லாம் கவலையில்லாமல் இருப்பதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதோடு, மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜக அதிகப்படியான நிதியை ஒதுக்கிய நிலையில் தனது திறமையின்மையால் மெஹபூபா ஆட்சியை இழந்தார் என்றும் சாடினர். இதனால் இவர்கள் 3 பேரும் பாஜகவில் சேர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சட்டசபை இன்னும் களைக்கப்படாத நிலையில், பாஜக ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “தேர்தலை சந்திக்க எந்தக் கட்சியும் தயாராக இல்லை. மீதமுள்ள நாட்களில் யாரும் அதிகாரத்திற்கு வெளியே இருக்க விரும்பவில்லை. அதனால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான முக்கிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்கிறோம். எல்லாம் சரியாக முடிந்தால், அமர்நாத் யாத்திரை முடிவடைவதற்குள் ஆகஸ்ட் மாத கடைசியில் அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும்” என்றார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் மற்ற கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களுடன் பாஜக காஷ்மீர் மாநில பொறுப்பாளர் ராம் மாதவ் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. பிடிபி கட்சிக்கு ஆதரவை வாபஸ் பெற்ற 10 நாட்களுக்கு பிறகு கடந்த ஜூன் 27ம் தேதி சஜ்ஜத் லோன் பகுதியில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. பிடிபி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மட்டுமல்லாது காங்கிரஸ் மற்றும் என்.சி எம்.எல்.ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான கவிந்தர் குப்தா கூறுகையில், “வரும் நாட்களில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பிடிபி கட்சியில் இருந்து மட்டுமல்லாமல், காங்கிரஸ் மற்றும் தேசியவாத மாநாட்டு கட்சியில் இருந்தும் இந்தக் கூட்டணியில் சேருவதற்கு வாய்ப்புள்ளது. புதிய ஆட்சிக்கான முன்னணியை அமையும்” என்றார்.
காஷ்மீரில் ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை. ஆனால் பிடிபிக்கு 28 இடங்கள் மட்டுமே உள்ளது. பாஜக ஆதரவை வாபஸ் பெற்ற போது காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவுடன் மெஹபூபா கட்சி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் மற்றும் என்.சி கட்சிகள் ஆதரவு அளிக்க மறுத்துவிட்டன. அதனால் தான் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. தற்போது பாஜக ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தன்வசம் 25 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இதுவரை 5 பிடிபி எம்.எல்.ஏக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், முன்னாள் அமைச்சர்கள் உட்பட 8 முதல் 12 எம்.எல்.ஏக்கள் வரை பிடிபி கட்சியில் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவுக்கு மேலும் 19 எம்.எல்.ஏக்கள் தேவையாக உள்ள நிலையில், குறைந்த அளவிலான எம்.எல்.ஏக்கள் தனக்கு ஆதரவு அளித்தால் கூட ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில் பாஜக அமைக்கும் முன்னணி புதிய அரசை அமைக்க வாய்ப்புள்ளது.
என்.சி கட்சியின் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “காஷ்மீர் சட்டசபையை களைக்க வேண்டும் என்று ஆளுநர் வோஹ்ராவுக்கு பரிந்துரை செய்யாமல் மெஹபூபா வரலாற்று பிழை செய்துவிட்டார்?. சட்டபடி முதலமைச்சரின் பரிந்துரைபடிதான் ஆளுநர் செயல்படுவார். அப்படி செய்திருந்தால் தனது கட்சி எம்.எல்.ஏக்கள் வேட்டையாடப்பாடாமல் இருப்பதை மெஹபூபா தடுத்திருக்கலாம். ஆனால் அதுதான் இனி நடக்கப் போகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.