ஜம்மு காஷ்மீர் வக்ஃப் தீர்மானம் | ”தமிழ்நாடு அரசைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள்” - மெகபூபா முப்தி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாவது அமர்வு மார்ச் 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதியுடன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 2 அமர்வுகளாக நடைபெற்ற இத்தொடரில் வக்ஃப் சீர்திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த வக்ஃப் திருத்த மசோதாக்களுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தவிர, நாடு முழுவதும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வக்ஃப் வாரிய சட்டத்தை எதிர்த்து ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர். வக்ஃப் வாரிய சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சபாநாயகர் இருக்கை முன் தேசிய மாநாடு, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த அமளியால் சபாநாயகர் சபையை 15 நிமிடம் ஒத்திவைத்தார். பின்னர், தொடங்கிய அவை நடவடிக்கையின்போதும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, கேள்வி நேரத்தை ஒத்திவைக்க தேசிய மாநாட்டு உறுப்பினர்கள், நசீர் குரேசி மற்றும் தன்வீர் சாதிக் ஆகியோர் தலைமையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தேசிய மாநாட்டு, காங்கிரஸ் மற்றும் சில சுயேச்சைகளைச் சேர்ந்த ஒன்பது உறுப்பினர்கள் விவாதத்திற்காக சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுத்தனர்.
வக்ஃப் (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான தேசிய மாநாட்டுத் தீர்மானம் குறித்து, NC எம்எல்ஏ தன்வீர் சாதிக், “இந்தப் பிரச்னையை எழுப்புவது நமது ஜனநாயக உரிமை. ஜம்மு-காஷ்மீர் ஒரு முஸ்லிம் பெரும்பான்மை மாநிலம். மேலும் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி விவாதிப்பது சட்டமன்ற உறுப்பினர்களின் பொறுப்பு. 10-11 சட்டமன்ற உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். நான் ஒரு தீர்மானத்தையும் சமர்ப்பித்துள்ளேன். மேலும் இந்த விவகாரத்தை விவாதிக்க சபாநாயகர் எங்களுக்கு நேரம் அனுமதிப்பார் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்
வக்ஃப் மசோதா தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் அரசு தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு உதவி செய்வதாக பிடிபி தலைவர் வாஹீத் பர்ரா குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து அவர், “இது மக்களின் ஆணையை ஏமாற்றுவதாக இருக்கிறது என நான் நம்புகிறேன். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாநிலம் ஜம்மு காஷ்மீர். வக்ஃப் மசோதாவுக்கு எதிராக சட்டமன்றமும் மாநிலமும் தீர்மானம் நிறைவேற்றத் தவறினால், அது ஒவ்வொரு முஸ்லிமின் கோபத்தையும் பிரதிபலிக்கிறது. தமிழ்நாடு இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது, மேலும் ஜம்மு காஷ்மீர்தான் முதலில் தானாக முன்வந்து இதை கொண்டு வந்திருக்க வேண்டும்" என்று வஹீத் பர்ரா கூறினார்.
இதற்கிடையே வக்ஃப் திருத்தச் சட்டம் மீதான ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இதற்கு மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவரும் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், ”ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற சபாநாயகர் வக்ஃப் மசோதா மீதான தீர்மானத்தை நிராகரித்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. வலுவான பெரும்பான்மையைப் பெற்றபோதிலும், அரசாங்கம் பாஜகவின் முஸ்லிம் விரோத நிகழ்ச்சி நிரலுக்கு முற்றிலும் அடிபணிந்து, இரு தரப்பினரையும் திருப்திப்படுத்த இழிவாக முயற்சிப்பதுபோல் தெரிகிறது. வக்ஃப் மசோதாவை உறுதியாக எதிர்த்த தமிழக அரசிடமிருந்து தேசிய மாநாட்டுக் கட்சி கற்றுக்கொள்ள வேண்டும். ஒரே முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியமான ஜம்மு-காஷ்மீரில், மக்களை மையமாகக் கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு இந்த முக்கியமான பிரச்னையை விவாதிக்கக்கூட தைரியம் இல்லாதது கவலையளிக்கிறது” என அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த மார்ச் 27ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளான அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதை மையப்படுத்தித்தான் மெஹபூபா முஃப்தி கருத்து தெரிவித்துள்ளார்.