'நடைப்பயிற்சி; செய்தித்தாள்கள்' - திகார் சிறையில் ப.சிதம்பரத்தின் ஒரு நாள்!
திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரம் தன்னுடைய ஒருநாளை எப்படி கழித்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சிதம்பரத்தை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நிலையில், அவர் காவல்துறை பேருந்தில் அழைத்து செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, ஆசியாவிலேயே மிகப்பெரிய திகார் சிறையில், பொருளாதார குற்றவாளிக்கான பகுதியில் உள்ள சிறப்பு சிறை பகுதியில் உள்ள ஏழாம் எண் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். முன்னதாக, சிறையில் ப.சிதம்பரத்துக்கு மேற்கத்திய கழிவறையுடன் கூடிய தனி அறை தவிர வேறு எவ்வித சிறப்பு வசதியும் அளிக்கப்படமாட்டாது என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தன்னுடைய ஒருநாளை எப்படி கழித்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி காலையில் சிறை வளாகத்தில் நடைப்பயிற்சி செய்த ப.சிதம்பரம், 6 மணி அளவில் தேநீருடன் சிறிது சிற்றுண்டியும் உட்கொண்டார். பின்னர் செய்தித்தாள்கள் படிப்பதில் தனது நேரத்தை சிதம்பரம் செலவிட்டார். பின்னர் சில மணி நேரங்களுக்கு பிறகு தனது மகனான கார்த்தி சிதம்பரத்தை சந்தித்தார். பின்னர் தனது தரப்பு வழக்கறிஞர்களையும் அவர் சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிதம்பரம் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளுக்கும், அவருக்கு இஸட் பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிதம்பரம் வருகிற 16-ஆம் தேதி 74-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இடையில் ஜாமீன் மனு தாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்டால் அவர் பிறந்தநாளை சிறையிலேயே கழிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

