''நாய்களையும் காப்பாற்றுங்கள்'' - வெள்ளத்தில் சிக்கியவரின் நாய்ப்பாசம்!
வெள்ளத்தில் சிக்கிய காவலாளி ஒருவரை மீட்கச் சென்ற மீட்புப்படையினர், காவலாளியின் கோரிக்கையால் நெகிழ்ந்தனர்.
கர்நாடகாவில் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட கர்நாடகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள், தென் கர்நாடகத்தில் உள் மாவட்டங்களான சிவமோகா, கார்வார், மங்களூரு, உடுப்பி, குடகு, ஹாசன், மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தர்வாத் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய காவலாளி ஒருவரை மீட்கச் சென்ற மீட்புப்படையினர், காவலாளியின் கோரிக்கையால் நெகிழ்ந்து போகினர். ஹனுமந்தப்பா என்பவர் தர்வாத் மாவட்டத்தில் உள்ள இங்கல்லள்ளி கிராமத்தில் காவலாளியாக உள்ளார். கடுமையான மழையால் ஹனுமாண்டப்பா தங்கியிருந்த இடத்தில் வெள்ளநீர் புகுந்துள்ளது. கட்டிட வேலை நடந்து வருவதால் அப்பகுதியில் ஹனுமந்தப்பாவுடன் சேர்ந்து இன்னும் சில வேலையாட்களும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
வெள்ளத்தில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித்தவித்த அவர்களை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். அப்போது தன்னை மீட்க வந்த அவர்களிடம் தன் நண்பர்களான இரண்டு நாய்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன, அவைகளையும் மீட்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். ஹனுமந்தப்பாவின் நாய்ப்பாசத்தில் நெகிழ்ந்து போன மீட்புப்படையினர் இரண்டு நாய்களையும் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய ஹனுமந்தப்பா, இரண்டு நாய்களும் நான் வசித்த இடத்தில் என்னுடன் இருந்தன. வெள்ளத்தில் அவைகளை விட்டுவர எனக்கு மனம் வரவில்லை என தெரிவித்தார்.