'மிகவும் குழப்பமான அரசியல்வாதி'... பவனின் 'யு-டர்ன்' அரசியலால் தகிக்கும் தொண்டர்கள்!

'மிகவும் குழப்பமான அரசியல்வாதி'... பவனின் 'யு-டர்ன்' அரசியலால் தகிக்கும் தொண்டர்கள்!
'மிகவும் குழப்பமான அரசியல்வாதி'... பவனின் 'யு-டர்ன்' அரசியலால் தகிக்கும் தொண்டர்கள்!

ஆந்திரத்தில் பவன் கல்யாணின் அரசியல் முடிவுகள் குறித்து கொந்தளித்து வருகிறார்கள் அவரின் ஆதரவாளர்களும், தொண்டர்களும். இதன் பின்னணியில் பவனின் 'யு-டர்ன்' அரசியல் நீள்கிறது.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை, நடிகரும் ஜனசேனா கட்சி நிறுவனருமான பவன் கல்யாண், கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி (ஜிஹெச்எம்சி) தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். 150 வார்டுகளைக் கொண்ட ஹைதராபாத் மாநகராட்சியில் 60 வார்டுகளில் ஜனசேனா போட்டியிடும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியான மூன்ற தினங்களில் யு-டர்ன் அடித்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

"நகராட்சி தேர்தலுக்காக பாஜகவிற்கு ஆதரவாக ப ரப்புரை செய்ய முடிவெடுத்துள்ளேன். ஒரு பாஜக வேட்பாளர் ஹைதராபாத் மேயராக வருவார். பாஜக வாக்குகள் பிளவுபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று பாஜகவுக்காக தொண்டர்களிடம் பரிந்துரைத்தார்.

பவன் கல்யாணின் இந்த அறிவிப்பு அவரின் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை பெற்று தந்திருக்கிறது. அரசியல் நோக்கர்கள் பவனை, "மிகவும் குழப்பான அரசியல்வாதி'' என்று விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த விமர்சனம், பவன் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்காக எடுத்த முடிவுகளால் மட்டும் வந்தது அல்ல; கட்சித் தொடங்கிய காலத்தில் இருந்து அவரின் 'யு-டர்ன் அரசியல்' காரணமாக கூறப்படுகிறது.

ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்!

நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், 'பவர் ஸ்டார்' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஆந்திர சினிமாவின் முக்கிய நடிகர் பவன் கல்யாண். பவன், கடந்த 2014ஆம் ஆண்டு ஜனசேனா கட்சியை தொடங்கினார். அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக பரப்புரை செய்தார். அந்தக் கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. பவனின் பரப்புரை அந்தக் கூட்டணிக்கு வெகுவாக கைகொடுக்க, ஆந்திர மாநிலத்தில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அடுத்தபடியாக அங்கு அதிக கவனம் ஈர்த்த அரசியல் கட்சித் தலைவராக பார்க்கப்பட்டார்.

ஆனால், எல்லாம் சில நாள்களுக்குதான் என்பதுபோல 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கே 'ஷாக்' கொடுத்தார் பவன். யாரும் எதிர்பாராத விதத்தில் புதிய கூட்டணியை அமைத்தார். பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு, மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்தார்.

"சட்டசபை மற்றும் மக்களவை என இரு தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ்வாதியுடன்தான் கூட்டணி. அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற நாங்கள் இணைந்துள்ளோம். மாயாவதி ஜி பிரதமராக வேண்டும். அதற்காக உழைக்க உள்ளோம்" என்று அதிரடி பேட்டியை தட்டிவிட்டார் பவன்.

மக்களவை மற்றும் ஆந்திர சட்டசபை தேர்தல்களில் இந்தக் கூட்டணி மண்ணைக் கவ்வியது. குறிப்பாக ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் ஜனசேனா மிக மோசமான தோல்வியை சந்தித்தது. அந்தத் தேர்தலில் வெறும் ஆறு சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. "முதல்வராவேன், ஆந்திரத்தின் தலையெழுத்தை மாற்றி எழுதுவேன்'' என்றவர், சட்டமன்ற உறுப்பினர்கூட ஆகமுடியாமல் போனார்.

தேர்தல் முடிந்த சில மாதங்களில் இந்தக் கூட்டணிக்கும் முடிவுரை எழுதினார் பவன். மீண்டும் தனது பழைய நட்பை புதுப்பித்துகொண்டார். பகுஜன் சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்தபோது 'அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற போகிறேன்' என்று மேடைக்கு மேடை முழங்கி, பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களிலும் அம்பேத்கரை முன்னிறுத்துவது, பாஜகவை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டிருந்த அதே பவன், தனது வீர வசனங்களை எல்லாம் மறந்து, பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பாஜக கூட்டணியில் தன்னை ஐக்கியமாகிக் கொண்டார்.

கட்சி ஆரம்பிக்கும் முன், "நான் தீவிர அரசியலில் இறங்க இருக்கிறேன். அப்படி அரசியலில் இறங்கிவிட்டால் ஒருபோதும் நடிப்புக்கு திரும்பமாட்டேன். நடிப்பு மற்றும் திரைப்படங்களை மக்களுக்காக விட்டுவிடுவேன். அரசியலில் தனக்கு எந்தப் பாத்திரமும் இல்லாதபோது மட்டுமே படங்களுக்குத் திரும்புவேன்" என்று அறிவித்து இருந்த பவன், அடுத்தடுத்த தோல்விகளால் அந்த அறிவிப்பில் இருந்து யு-டர்ன் அடித்தார். தனது செலவுகளுக்காக இந்த அறிவிப்பை வாபஸ் பெறுகிறேன் என்று சில நாட்களில் நடிப்புக்கு மீண்டும் திரும்பினார்.

இப்படி முன்னும் பின்னுமாக முடிவுகளை மாற்றி மாற்றி எடுத்துவரும் பவன், இப்போது ஹைதராபாத் நகராட்சித் தேர்தலில் செய்தது ரசிகர்களை கோபத்தின் உச்சிக்கு கொண்டுசென்றுள்ளது.

"எந்தவொரு கோரிக்கையும் வைக்காமல் பாஜவுக்காக பரப்புரை செய்யப்போவதாக அறிவித்துள்ளது அடிமைத்தனத்தின் உச்சம். பவன், தான் மீண்டும் பாஜகவுக்கு அடிமை என்பதை நிரூபித்தார்" என்று ரசிகர் ஒருவர் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். ஆம், அந்த ரசிகர் சொன்னதுபோலவே ஜி.ஹெச்.எம்.சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை எதிர்பார்த்தே முதலில் ஜனசேனா தேர்தலில் போட்டி என்று அறிவித்தார். ஆனால், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூப்பிட்டு பேசியதும் நிபந்தனையற்ற ஆதரவை கொடுத்து அமைதியாகிக்கொண்டார்.

"பவனின் இந்தச் செயல் தொண்டர்களை சோர்வடைய செய்துள்ளது. பவன் இந்த அளவிற்கு குனிந்து விடுவார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவர் போட்டியிட்டு தேர்தலில் தோல்வியடைந்திருந்தால்கூட, அவருக்கு தொண்டர்களிடம் இருந்து கொஞ்சம் மரியாதை கிடைத்திருக்கும். ஜனசேனா மூழ்கும் கப்பல். அதை யாராலும் காப்பாற்ற முடியாது" என்று ஆந்திராவின் அரசியல் விமர்சகர் மகேஷ் கதி கூறியுள்ளார்.

சினிமாவைப் பொறுத்தவரை, பவன் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். அவரது ரசிகர்கள் அவரை "பவர் ஸ்டார்" என்று மதித்து வருகிறார்கள். ஆனால், அரசியல் என்று வரும்போது, பவன் கல்யாண் தெலுங்கு மாநிலங்களில் "மிகவும் குழப்பமான அரசியல்வாதி"யாகவே காட்சியளிக்கிறார்!

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com