‘பொதுமுடக்கத்தால் வேலையின்மை.. வாட்டிய வறுமை’ - ஆட்டோ டிரைவர் தற்கொலை
பீகார் மாநிலத்தில் பொதுமுடக்கம் காரணமாக வேலையில்லாததால் ஏற்பட்ட வறுமையால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதுவரை 5ஆம் கட்டங்களாக பொதுமுடக்கம் வந்துள்ளது. பொதுமுடக்க காலத்தில் தொழிலாளர்கள் பலரும் வேலையிழந்தனர். புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்து சாலைகளில் நடந்தே தங்கள் ஊர்களுக்கு சென்றனர். மூன்றாம் கட்ட பொதுமுடக்கத்தில் இருந்து சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. இருப்பினும், மீண்டும் பழைய நிலைக்கு பணிகள் திரும்பவில்லை. கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருவதால் வேலையின்மை தொடர்ந்து கொண்டே வருகின்றது. பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் நிவாரணங்கள் அறிவித்தாலும் அவை போதுமானதாக இல்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பொதுமுடக்கம் காரணமாக முற்றிலுமாக வேலையிழந்து வறுமை வாட்டிய நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கடன் மூலமாகத்தான் அவர் தன்னுடைய ஆட்டோவை வாங்கியிருந்தார். கடந்த மூன்று மாதமாக அவருக்கு வேலையில்லாத நிலையிலும், கடனுக்கான வங்கித் தவணையை செலுத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து அவரது தந்தை கூறுகையில், “சனிக்கிழமை இரவு வீட்டின் அறைக்குள் சென்ற ரவி, நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. பின்னர், கதவை உடைத்துக் கொண்டு நாங்கள் உள்ளே சென்றோம். அவர் உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரை நம்பித்தான் எங்களது குடும்பமே இருந்தது. அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. எங்களுக்கு என்று இன்னும் குடும்ப அட்டை கூட வழங்கவில்லை” என்றார்.
பீகார் மாநிலத்தில் வேலையிழப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்கெனவே மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர். குமார் ரவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாவட்ட அரசு அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு சென்று 25 கிலோ அரிசி மற்றும் கோதுமையை நிவாரணமாக வழங்கினர்.