”மக்களை பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றியுள்ளோம்”- பத்தனம்திட்டா ஆட்சியர் பிரத்யேக பேட்டி

”மக்களை பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றியுள்ளோம்”- பத்தனம்திட்டா ஆட்சியர் பிரத்யேக பேட்டி
”மக்களை பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றியுள்ளோம்”- பத்தனம்திட்டா ஆட்சியர் பிரத்யேக பேட்டி

கேரள மாநிலத்தில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தின் ஆட்சியர் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

கனமழை காரணமாக கேரள மாநிலம் பத்தனம்திட்டா சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், கேரளாவின் பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் அங்கிருக்கும் களநிலவரம் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் திவ்யா ஐயர் நம்மிடையே பேசுகையில் தெரிவித்தவை:

“கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து 2800 பேர், 85 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உள் காடுகளில் அதிக மழை பொழிந்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்றும் நாளையும் மழை குறைவாக இருக்கும் என வானிலை மையம் அறிவித்து இருப்பதால் இந்த இரண்டு நாட்களில் அணையில் நீரை திறந்து விட்டுள்ளோம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் மக்களை பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றியுள்ளோம்.

சபரிமலையில் நடை திறப்பு குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையும், நிலச்சரிவு அச்சுறுத்தலும் இருப்பதால் பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு சபரிமலையில் இந்த துலா மாத தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது” என்றார்.

முன்னதாக பத்தினம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதாலும், பம்பா நதியில் அபாயக் கட்டத்தைதாண்டி நீர் செல்வதாலும் சபரிமலைக்கு பக்தர்கள் வருவதைத் தவிர்க்குமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மழை பாதிப்பு காரணமாக அந்த தடை நீட்டிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதன்படி சபரிமலையில் வரும் 21ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கேரளா வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் அறிவித்துள்ளார்.

- நெல்லை நாகராஜன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com