”தண்டவாளம் முழுசும் ரத்த வெள்ளம்; என் வாழ்நாளில் இந்த காட்சிகளை மறக்கமாட்டேன்”- நேரில் பார்த்த பயணி!

ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு, பக்கத்தில் லூப் டிராக்கில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியதில், 238 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 900 பேர் காயமடைந்தனர்.
ரயில் விபத்து
ரயில் விபத்துPT

ஒடிசாவில் வெள்ளிகிழமை இரவு நடைப்பெற்ற மிக மோசமான ரயில் விபத்தில், சரக்கு ரயிலின் மீது இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் பயணிகள் பலர் இறந்தது மற்றுமின்றி பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதில், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு, பக்கத்தில் லூப் டிராக்கில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியதில், 238 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 900 பேர் காயமடைந்தனர்.

இதில் விபத்திலிருந்து தப்பி பிழைத்தவர்கள் தங்களின் அனுபவத்தை பல்வேறு வளைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

முன்னதாக டிவிட்டரில் ஒரு பயணி, “ஹவுராவில் இருந்து சென்னை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸில் ஒரு பயணியாக, காயமின்றி தப்பியதற்கு அதிர்ஷ்டம் மிக்கவனாக உள்ளேன். இது மிகப்பெரிய ரயில் விபத்து சம்பவமாக இருக்கலாம்," என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

அடுத்ததாக, பெங்களூரு-ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் மூன்று ஜெனரல் பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்து தடம் புரண்டுள்ளன. இதில் பயணம் செய்த, அனுபவ் தாஸ் என்ற பயணி, தனது ட்விட்டரில், ”கோரமண்டல் எக்ஸ்பிரஸின் ஜெனரல், ஸ்லீப்பர், ஏசி 3 அடுக்கு மற்றும் ஏசி 2 அடுக்கு உட்பட கிட்டத்தட்ட 13 பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. கிட்டத்தட்ட 200-250 இறப்புகள் இருக்கும்” என்றுகருத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் ."குடும்பம் குடும்பமாக நசுக்கப்பட்டுள்ளனர். கைகால்கள் இல்லாத உடல்கள் மற்றும் ரயில் தண்டவாளத்தில் இரத்தக்களரி இதை என் வாழ்நாளில் என்னால் மறக்கமுடியாத ஒரு காட்சி; இறந்தவர்களுக்கு எனது இரங்கல்கள். பாதிக்கப்பட்டவர்களை கடவுள் காப்பாற்றுவார். எனது ஆழ்ந்த இரங்கல்கள்," என்று அவர் கூறினார்.

இது குறித்து ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில், “மீட்புப் பணிகள் துரிதவேகத்தில் நடைபெற்று வருகின்றன, அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மூன்று NDRF பிரிவுகள், 4 ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் பிரிவுகள், 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு மீட்புக் குழுக்கள், 30 மருத்துவர்கள், 200 காவல்துறை களத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். மற்றும் 60 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துக் கொண்டதுடன், பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து (பிஎம்என்ஆர்எஃப்) இறந்தவர்களின் குடும்பத்திற்கு ₹ 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹ 50,000 இழப்பீடும் அறிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com