தேர்தல் களம், கொரோனா பரவல்: முன்கூட்டியே முடிவுக்கு வருகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்!

தேர்தல் களம், கொரோனா பரவல்: முன்கூட்டியே முடிவுக்கு வருகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
தேர்தல் களம், கொரோனா பரவல்: முன்கூட்டியே முடிவுக்கு வருகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்!

சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டு வருவதாலும், கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாலும் ஓரிரு நாட்களில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி முடிவுக்கு வருகிறது.

ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெற இருந்த நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்து கொள்ளப்படுகிறது. பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருப்பதால், இந்தக் கட்சிகளை சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னதாகவே முடித்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்கள்.

இந்தக் கோரிக்கையை பரிசீலித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர், இந்த வார இறுதியில் கூட்டத்தொடரை முடித்துக் கொள்வது குறித்து இறுதிகட்ட ஆலோசனைகளை தற்போது நடத்தி வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதியை முன்கூட்டியே முடித்துக் கொள்வது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என பல்வேறு கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் மாதம் 8-ஆம் தேதி அன்று தொடங்கியது. ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதியன்று வரை இரண்டு அவைகளின் அமர்வுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், பல முக்கிய கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆகவே, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களின் வருகை குறைவாகவே உள்ளது.

இதைத் தவிர, சமீப நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதும் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைக்கு இன்னொரு காரணமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் ஹோலிப் பண்டிகை என்பதால் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஹோலி கொண்டாட்டங்கள் வழக்கம்போல இல்லை என்றாலும், தங்களுடைய சொந்த ஊரில் இருக்க வேண்டும் என வடமாநிலங்களை சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நிதிநிலை அறிக்கை விவாதங்கள்:

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பட்ஜெட் தாக்கல் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளுக்கு பிறகு பிப்ரவரி 15-ஆம் தேதியன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில் முடிவுக்கு வந்தது.

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 8-ஆம் தேதி தொடங்கியது முதல், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் தொடர்பான பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூட்டத்தொடரை முன்னதாக முடித்துகொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப்பது அத்தியாவசியமானது என்பதால், கூட்டத்தொடர் இதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே முக்கிய மசோதாக்களை விரைவாக பரிசீலித்து ஒப்புதல் அளிக்கும் பணி இரண்டு அவைகளிலும் நடந்து வருகிறது.

இன்று பட்ஜெட் தொடர்பான விவாதங்களை நடத்தி பட்ஜெட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதற்காக மாநிலங்களவை அமர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆனால், நேற்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முஹம்மத் ஜான் திடீரென மாரடைப்பால் காலமானார். இன்று காலை அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு, ஒரு மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று பட்ஜெட் தொடர்பான விவாதம் மற்றும் முக்கிய மசோதாக்களை பரிசீலனை செய்யும் பணி இரவுவரை நடைபெறும் என வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.

இப்படி இரண்டு அவைகளிலும் முக்கிய மசோதாக்கள் குறித்து அவசர அவசரமாக விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வரும் என நாடாளுமன்ற உறுப்பினர்களில் எதிர்பார்க்கிறார்கள்.

தேவேந்திரகுல வேளாளர் மசோதா:

இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தேவேந்திரகுல வேளாளர் மசோதாவுக்கு இரண்டு அவைகளிலும் ஒப்புதல் அளித்திருக்கின்றன. அதேபோலவே புதுச்சேரி மாநிலத்திற்கான இடைக்கால பட்ஜெட் ஒப்புதல் அளித்துள்ளன.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com