இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்!
ஆபரேஷன் சிந்தூர், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து, கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில் டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கும் நிலையில், ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் திருத்தப்பட்ட புதிய வருமான வரிச்சட்ட மசோதா உள்ளிட்ட 8 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இரு அவைகளையும் சுமூகமாக நடத்திச் செல்வது குறித்து அனைத்துக்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ், திமுக சார்பில் டிஆர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத்திருத்தம், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக ட்ரம்ப் கூறி வருவது உள்ளிட்டவற்றில் உரிய விளக்கம் அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
ட்ரம்ப்பின் கருத்து குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. அப்போது எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து பிரச்சினைகளுக்கும், விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு பதில் தர அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு, இந்தியா - பாகிஸ்தான் சண்டை தொடர்பாக, டொனால்ட் ட்ரம்பின் கருத்துக்கு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக குறிப்பிட்டார். கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். இந்திய - சீன எல்லை விவகாரம், மணிப்பூருக்கு இதுவரை பிரதமர் பயணம் மேற்கொள்ளதாது உள்ளிட்ட பிரச்சினைகளும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.